இது வெட்கக்கேடான செயல் - தென் ஆப்பிரிக்கா வீரரின் சர்ச்சை அவுட் குறித்த விமர்சனங்கள்

19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஜிவேஷன் பில்லே அவுட்டான விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Jan 17, 2018, 22:36 PM IST

19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஜிவேஷன் பில்லே அவுட்டான விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின. இதில் 76 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஜிவேஷன் பில்லே அவுட்டான விதம் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆட்டத்தின் 17ஆவது ஓவரை ஜேரியன் ஹோய்டே வீசினார். அதனை எதிர்கொண்ட ஜிவேஷன் பில்லே பந்தை தடுத்தார். ஆனால், பந்து ஸ்டெம்பை நோக்கி சென்றது.

அப்போது ஜிவேஷன் பில்லே பந்தை பேட்டால் தடுத்து, தனது கையால் எடுத்து விக்கெட் கீப்பரிடம் கொடுத்தார். இதனை மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான இம்மானுவேல் ஸ்டீவர்ட் அவுட் கேட்டு நடுவரிடம் முறையிட்டார்.

மூன்றாவது நடுவரான ரான்மோர் மார்டினெஷ், பலமுறை ரீப்ளே செய்து பார்த்துவிட்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சாதகமாக ஜிவேஷன் பில்லே அவுட் என தீர்ப்பு வழங்கினார். இது கிரிக்கெட் உலகில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஃபாப் டு பிளஸ்ஸி:

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள சர்வதேச தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஃபாப் டு பிளஸ்ஸி, “இது முழுமையாக நகைச்சுவையாக உள்ளது... ஆட்டத்தின் ஆன்மா இதுவல்ல. நான் இது மாதிரி 100 முறை செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

லாரன்ஸ் மேத்லேன்:

19 வயதிற்கு உட்பட்டோருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் லாரன்ஸ் மேத்லேன் கூறுகையில், “நாங்கள் மிகச் சாதரணமாக இதனை எடுத்துக் கொண்டோம். நாங்கள் விதிமுறைகளின் கீழ்தான் விளையாடினோம். இது ஆட்ட விதியில் இதுவும் ஒன்று. இது நடந்து முடிந்துவிட்டது. நிச்சயமாக நாங்கள் நீண்ட காலத்திற்கு இதனை ஒரு பாடமாக எடுத்துக் கொள்வோம்” என்றார்.

பிஷப்:

ஆட்டத்தின் வர்ணனையாளர் பிஷப் கூறுகையில், “இது எதிர்பாரத ஒரு விஷயம். பேட்ஸ்மேன் தனக்கு சாதகமான பலனுக்காக முயற்சி செய்யவில்லை. அவர் நியாயமற்ற முறையில் நடந்துகொள்ள முயற்சிக்கவில்லை. நடுவர்கள் அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்துள்ளனர். பந்து நின்றுவிட்டது. ஸ்டெம்பிற்கு அருகாமையில் இல்லை. இது ஒரு தேவையான விதிமுறை என்று நினைக்கவில்லை. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டீபன் பிளமிங்:

மேலும் நீயூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங், “நிச்சயமாக இது ஒரு வெட்கக்கேடான செயல்” என்று தெரிவித்துள்ளார்.

மிட்செல் ஜான்சன்:

ஆனால், ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஜான்சன் கூறுகையில் “நீங்கள் இப்படி செய்வதை நிறுத்தி இருக்கலாம். நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்திருந்தலாம் ஆட்டத்தின் விதிமுறை இதுதான். வீரர்கள் தவறான எந்த விஷயத்தை செய்யக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

மார்க் பவுச்சர்:

தென் ஆப்பிரிக்க முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் கூறுகையில், “விவாதிக்கலாம்! மறுபடியும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ஆட்டத்தின் ஆன்மாவிற்கு எதிரான விஷயத்திற்குள் சென்றுள்ளனர்.

விதிமுறையோ, இல்லையோ. ஏபி டி வில்லியர்ஸ், ஸ்டீவன் ஸ்மித், விராட் கோலி போன்ற வீரர்கள் பந்தை ஃபீல்டர்களிடம் எடுத்துக் கொடுத்துள்ளனர். இதனை இளம் வீரர்கள் பின்பற்றியுள்ளனர். கடுமையாக விளையாடலாம். ஆனால், ஆட்டத்தின் ஆன்மாவோடு நியாயமான முறையில் விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வீடியோ கீழே:

You'r reading இது வெட்கக்கேடான செயல் - தென் ஆப்பிரிக்கா வீரரின் சர்ச்சை அவுட் குறித்த விமர்சனங்கள் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை