19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஜிவேஷன் பில்லே அவுட்டான விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அற்புதமாக விளையாடிய வாண்டிலே மேக்வேடு 99 பந்துகளில் 12 பவுண்டரிகள் உட்பட 99 ரன்கள் குவித்தார். ஜிவேஷன் பில்லே 47 ரன்கள் எடுத்து சர்ச்சையான முறையில் அவுட்டானார்.
பின்னர், விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 76 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஜிவேஷன் பில்லே அவுட்டான விதம் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆட்டத்தின் 17ஆவது ஓவரை ஜேரியன் ஹோய்டே வீசினார். அதனை எதிர்கொண்ட ஜிவேஷன் பில்லே பந்தை தடுத்தார். ஆனால், பந்து ஸ்டெம்பை நோக்கி சென்றது.
அப்போது ஜிவேஷன் பில்லே பந்தை பேட்டால் தடுத்து, தனது கையால் எடுத்து விக்கெட் கீப்பரிடம் கொடுத்தார். இதனை மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான இம்மானுவேல் ஸ்டீவர்ட் அவுட் கேட்டு நடுவரிடம் முறையிட்டார்.
மூன்றாவது நடுவரான ரான்மோர் மார்டினெஷ், பலமுறை ரீப்ளே செய்து பார்த்துவிட்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சாதகமாக ஜிவேஷன் பில்லே அவுட் என தீர்ப்பு வழங்கினார்.
கிரிக்கெட் விதிமுறை 37.4இன் படி பேட்ஸ்மேன் பந்தை எடுக்கக்கூடாது என்ற விதியின் கீழ் அவுட் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. முக்கியமாக ஜிவேஷன் பந்து நின்றவுடன் தான் எடுத்துள்ளார். இது கிரிக்கெட் உலகில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சர்ச்சைக்குரிய வீடியோ கீழே: