பாமக, தேமுதிகவை கூட்டணிக்குள் அழைப்பது எங்கள் சுயமரியாதைக்கே இழுக்கு' எனக் கூறி, இந்த இரண்டு கட்சிகளையும் ஓரம்கட்டினார் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா. இந்தக் கருத்துக்குக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா.
ஆனால் ஆ.ராசாவின் கருத்துக்குப் பதிலே கூறாமல் பெட்டிப் பாம்பாக அடங்கி இருந்தார் ராமதாஸ். இதைப் பற்றி அப்போதே விமர்சனங்கள் கிளம்பின.
'திமுகவை விட்டுவிடக் கூடாது என்பதால் ராமதாஸ் அமைதியாக இருக்கிறார்' என்ற கருத்து கிளம்பியது. இப்போது வெளிப்படையாகவே அதிமுகவை ஆதரிக்கத் தொடங்கிவிட்டார் ராமதாஸ்.
தேமுதிகவும் அதிமுக கூட்டணியில் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. இதைக் கவனிக்கும் திமுகவினர், விஜயகாந்த் நமது அணிக்குள் வந்தால் நமக்குக் கூடுதல் பலம் கிடைக்கும்.
இதனால் பாமகவுக்கு எதிரான தலித் வாக்குகளும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வாக்குகளும் நமக்கு வந்து சேரும். 2 சீட்டுக்கு சரி என்றால், விஜயகாந்த்தை நம்மோடு சேர்த்துக் கொள்ளலாம் என விவாதம் நடத்தியுள்ளனர்.
இதில் தேமுதிகவுக்கு உடன்பாடில்லை என்கின்றனர் அக்கட்சியின் பொறுப்பாளர்கள். ' திராவிடக் கட்சிகளைக் கடுமையாக விமர்சனம் செய்துதான் கடந்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டோம். இப்போதுகூட பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத்தான் சுதீஷ் கூறியிருக்கிறார்.
14 இடங்களில் போட்டியிடும் அளவுக்கு வலிமையாக இருந்தோம். ஒன்றிரண்டு இடங்களுக்காக எங்களை அடமானம் வைக்க விரும்பவில்லை. இந்தமுறை எங்களுடைய வலிமையைக் காட்டுவோம்' என்கிறார்கள்.
பாமகவையும் தேமுதிகவையும் மனதில் வைத்துத்தான், எந்தக் கட்சிகளோடும் கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை என துரைமுருகன் கூறினார். ஸ்டாலின் கருத்தைத்தான் அவர் எதிரொலித்தார் என்கிறார் திமுக பொறுப்பாளர்கள்.
-எழில் பிரதீபன்