மக்களவைத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஓர் இடத்தை ஒதுக்கியிருக்கிறார் டிடிவி.தினகரன். அக்கட்சியின் சார்பாக மத்திய சென்னையில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார் எஸ்டிபிஜ தலைவர் தெஹ்லான் பாகவி.
அதேநேரம் தினகரனுடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இதைப் பற்றி பேராசிரியரிடம் பேசிய அக்கட்சி பொறுப்பாளர்கள், ' ஜெயலலிதா இறந்த பிறகு மோடி எதிர்ப்பு நிலையில் உறுதியாக இருந்து வருகிறார் தினகரன்.
அதன் விளைவாக ஆர்கேநகரில் திமுகவை டெபாசிட் இழக்க வைத்தார். மாநிலம் முழுவதும் சிறுபான்மையினர் ஓட்டுக்களை தினகரன் கணிசமாக வாங்குவார். திமுக அணியில் காங்கிரஸ் இருப்பதால் முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் நமக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என மனக்கோட்டை கட்டி வருகிறார் ஸ்டாலின். அதனால்தான் நமக்கு ஒரு சீட் கொடுப்பதைக் கூட கேலியாகப் பார்க்கிறார் துரைமுருகன்.
தினகரன் பிரிக்கப் போகும் வாக்குகளால் அதிகம் பாதிக்கப்படப் போவது திமுக, காங்கிரஸ் கூட்டணிதான். இதை அறியாமல் கூட்டல் கழித்தல் கணக்குகளைப் போட்டு வருகிறார்கள். இதுவே கருணாநிதி இருந்திருந்தால் நமக்கு ஒரு சீட்டை நிச்சயமாக ஒதுக்கியிருப்பார். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் சொல்வதைத்தான் ஸ்டாலின் நம்புகிறார்.
அனைத்துத் தொகுதிகளிலும் கணிசமான அளவுக்கு சமுதாய வாக்குகளை வைத்திருக்கிறோம். அதனை வெளிப்படுத்துவதற்கு இந்தத் தேர்தலை பிரதானமாகப் பயன்படுத்திக் கொள்வோம் என விவாதித்துள்ளனர்.