Tuesday, Mar 9, 2021

பாலிவுட் கொண்டாடும் சாதனை மனிதன் “தமிழன் முருகானந்தம்”

சாதனை மனிதன் “தமிழன் முருகானந்தம்”

கோவையைச் சேர்ந்த, 'நாப்கின்' தயாரிப்பாளர், முருகானந்தம், இவரது வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் பேட்மேன் (PADMAN) என்ற பெயரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன்புதூரைச் சேர்ந்த கைத்தறி தொழிலாளியின் மகன் முருகானந்தம், (51) இவர் மாதவிடாய் நாட்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கினை மலிவு விலையில் தயாரித்து, ஏழை பெண்களுக்கும் போய் சேரும் வகையில் அற்புதத்தை நிகழ்த்தியவர். நாப்கின் தயாரிப்பது எப்படி என, கிராம பெண்களுக்கும் கற்றுக்கொடுத்தும் வருகிறார்.

இதற்காக அவர் கடந்து வந்த கடினமான பாதைகளை சற்று திரும்பி பார்ப்போமா....

இவருடைய தந்தை அருணாச்சலம் தாய் வனிதா, இவர்கள் கோவையில் கைத்தறி நெசவுத் தொழில் செய்து வந்தனர், அருணாச்சலம் ஒரு விபத்தில் மரணமடைந்ததால் குடும்பம் வறுமையில் வாடியது, தனது 14-வது வயதில் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, சிறு சிறு வேலைகளைச் செய்து சிறுவயதிலேயே தனது குடும்பத்தை வழிநடத்த வேண்டிய நிலைக்கு ஆளானார் முருகானந்தம்.

திருமணம் முடிந்த பிறகும் வறுமை பின் தொடர்ந்தது, ஒருகட்டத்தில் தன் மனைவி மாதவிடாய் காலத்தில் அதற்கு பயன்படுத்த பழைய துணிகளை சேகரித்து, அதை துண்டுகளாக்குவதை கண்டு கவலை கொண்டார், அது சுகாதாரமற்றது என உணர்ந்தார், கார்பரேட் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் நாப்கின்களை வாங்கினால் செலவு கட்டுப்படியாகாது என்பதால், அதற்கான எளிய வழிமுறையைக் கண்டறிய முற்பட்டார், தானே சொந்தமாக நாப்கின் தயாரித்தால் என்ன என்று யோசிக்கிறார், அதற்கான முயற்சியிலும் இறங்கினார்.

பிரச்சினையை சரியாக அறிந்துகொள்ள பல சோதனைகளை மேற்கொண்டார், துவக்கத்தில் பருத்தியாலான நாப்கின்களை தயாரித்தார், ஆனால் அவற்றை அவரது மனைவியும் சகோதரிகளும் ஏற்புடையதாக இல்லை என நிராகரித்து விட்டதோடு மட்டுமன்றி, அவரது புதிய சோதனை முயற்சிகளுக்கு இணங்கவும் மறுத்துவிட்டனர்.

மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவது தவறு என்ற மனப்பான்மை மக்களிடையே அப்போது நிலவியதால் அவர் கண்டுபிடிக்கும் புதிய நாப்கின்களை பயன்படுத்திப் பார்த்து அதன் நிறைகுறைகளைப் பற்றி அவரிடம் சொல்வதற்கு பெண்கள் எவரும் முன்வரவில்லை. இதனால் விலங்குகளின் இரத்தத்தைக் கொண்டு இவர் நிகழ்த்திய சில சோதனைகளால், குடும்பத்தாராலும் சமூகத்தாலும் அவமானப்படுத்தப் பட்டார். இவரது முயற்சியை தவறான செயலாக கருதி, அவரைச் சார்ந்தவர்களே அவரை வெறுத்தனர், விலகிச் சென்றனர். சமூகத்தில் பல அவமானங்களை எதிர்கொண்டார்.

ஆனால் தன் பாதையை விட்டு கடைசிவரை அவர் பின்வாங்கவே இல்லை. இறுதியில் மரச்சக்கை இதற்கு சரியான தீர்வாக அமையும் எனக் கண்டார், வணிக நேப்கின்களுக்கு பயன்படுத்தப்படுவது பைன் மரப்பட்டையின் மரக்கூழிலிருந்து பெறப்பட்ட "மாவிய இழை" என்பதைக் கண்டறிய அவருக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது, நாப்கின்கள் இரத்தப்போக்கை உறிஞ்சும்போது அவற்றின் வடிவமைப்பு மாறாமல் அவ்விழைகள் காத்தன, நாப்கின் தயாரிக்க அதன் மூலப்பொருளுக்கு ஆகும் செலவைவிட 40 மடங்கு அதிகமாக ஒவ்வொரு நாப்கினும் விற்பனை செய்யப்படுவதைக் கண்டார்.

மூலப்பொருள் இருந்தால் போதுமா.? அதை தயாரிக்க இயந்திரங்கள் வாங்க வேண்டாமா.? அதற்கான இயந்திரங்களின் விலையை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தார், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரத்தின் விலை இந்திய மதிப்பில் மூன்றரை கோடி ரூபாயாக இருந்தது, தனது கடுமையான முயற்சியினால், மலிவான விலையில் எளிய முறையில் குறைந்த பயிற்சியுடன், நாப்கின்களை தயாரிக்கக் கூடிய ஓர் இயந்திரத்தை இவர் கண்டுபிடித்தார், முறைப்படுத்தப்பட்ட பைன் மரக்கூழை மும்பையிலிருந்து இறக்குமதி செய்தார், இந்த மரக்கூழ் பயன்படுத்தப்பட்டு பேடுகள் தயாரிக்கப்படுகிறது. அவர் கண்டுபிடித்த இயந்திரத்தின் விலை 65,000 ரூபாய்தான். அதற்கான காப்புரிமையை வாங்கியுள்ளார் முருகானந்தம், அதன்பிறகு நாப்கின் தயாரித்து விற்பனைக்கு அனுப்பியபோது பெண்களிடம் வரவேற்பு அதிகரித்தது.

கோவையில் ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி, நாப்கின் தயாரிக்கும் இயந்திரங்களை இந்தியா முழுவதுமுள்ள ஊரகப் பெண்களுக்கு மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு விற்பனை செய்து வருகிறார், இதன் மூலம் அவர்கள் வேலை வாய்ப்பு பெற்று வறுமையிலிருந்து மீண்டுவர இது ஒரு வாய்ப்பாய் அமைகிறது.

முருகானந்தத்தின் கண்டுபிடிப்பு

பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதிலும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. மேலும், தரமான நாப்கின்களை பயன்படுத்துவதால் மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் அன்றாட வாழ்வில் இயல்பாக இயங்க முடிகிறது. இவரது வெற்றி பிற தொழில்முனைவோரையும் இத்துறையில் இறங்க ஊக்கப்படுத்தியுள்ளது, அவர்கள் பயன்படுத்தப்பட்ட வாழைநார் அல்லது மூங்கிலை மூலப்பொருளாகப் பயன்படுத்தி நாப்கின் தயாரிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

இவரது தயாரிப்புகளை உலகளாவிய வணிகமயமாக்க பல கார்பரேட் நிறுவனங்கள் முன்வந்தபோதும், இவரது காப்புரிமை கண்டுபிடிப்புகளுக்கு மில்லியன்களில் விலை பேசியபோதும், இவர் அவர்களுடன் கூட்டணி சேர மறுத்துவிட்டார். 2005-ல், ஐ.ஐ.டி.,யின் "சமூக மாற்றத்துக்கான சிறந்த கண்டுபிடிப்பு விருது" கிடைத்தது, 2012ம் ஆண்டில், டைம்ஸ் ஆப் நியூயார்க் நாளிதழ், உலகின் செல்வாக்குமிகுந்த 100 நபர்களில் ஒருவராக அவரை தேர்வு செய்தது.

''இந்தியாவை, 100 சதவீதம் நாப்கின் பயன்படுத்தும் நாடாக மாற்றுவதே நோக்கம்'' எனக் கூறும் முருகானந்தத்தின் சேவையை பாராட்டி, மத்திய அரசு 'பத்ம ஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்துள்ளது. விருது பெற்றது குறித்து அவரிடம் கேட்டதற்கு, "என் முயற்சிக்கு கிடைத்த இந்த அங்கீகாரம், கூடுதலான பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஏழைகளுக்காக இன்னும் அதிகம் உழைக்க விரும்புகிறேன், மாதவிடாய் நாட்களில் இந்தியாவில், வெறும் 5 சதவீத பெண்களே நாப்கினை பயன்படுத்துகின்றனர், எஞ்சியவர்கள் வேறு வழிமுறைகளை கையாளுகின்றனர், காரணம் சந்தையிலுள்ள பிரபல கம்பெனிகளின் நாப்கின்கள் அதிக விலை கொண்டவை, எனவே விலை குறைவான நாப்கின் தயாரித்து, அனைத்து கிராம பெண்களும் பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்துவதே எனது லட்சியம் ஆசை, இதன்மூலம் சுகாதாரமான இந்தியா உருவாகும்" என்கிறார் முருகானந்தம்.

இவரது முயற்சிக்கு பெருமை சேர்க்கும்வகையில் ஒருமுறை இவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி டுவிங்கிள் கண்ணா, அந்த சந்திப்பிற்கு பிறகு "சேனிட்டரி நாப்கின் தயாரிப்பு தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க அவர் எதிர் கொண்ட வலிகளையும், அதன் மூலம் கிடைத்த அனுபவங்களையும் படமாக்கினால் என்ன" என யோசித்தார், அதற்கான அனுமதியை முருகானந்தத்திடம் வாங்கினார், பிரபல பாலிவுட் இயக்குநர் பால்கியிடம் இதைப்பற்றி கூற, பால்கியும் முருகானந்தத்திடம் பேசி, அவருடைய வாழ்க்கை வரலாறு முழுவதையும் தெரிந்து கொண்டு, கதை எழுதி அதை திரைப்படமாக்கினார். டுவிங்கிள் கண்ணாவே இந்த படத்தை தயாரித்து, தனது கணவர் அக்ஷய் குமாரை கதாநாயகனாக்க, பேட்மேன் திரைப்படம் உருவானது. கிராமப்புற பெண்களுக்கு சேனிட்டரி நாப்கின் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை பற்றி பேசுகிறது இந்த படம். இப்படத்தில் ரிலீஸுக்குப் பிறகு முருகானந்தத்தை ரியல் ஹீரோ என்று பாராட்டியுள்ளார் அக்ஷய் குமார்.

முருகானந்தம், மக்களின் பயன்பாட்டுக்காக தயாரித்த நாப்கினை தனது வியாபாரத்திற்காக பெரிதாக விளம்பரப்படுத்தவில்லை. இப்படி ஒரு சாதனையாளனின் வாழ்க்கையை கருவாகக் கொண்டு படம் எடுக்க தமிழ் சினிமாவின் பிரம்மாக்கள் யாரும் யோசிக்கவேயில்லை. பேட்மேன் படத்தை ப்ரமோட் செய்யும் விதமாக, நாப்கின் குறித்த சமூக விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஹிந்தி பிரபலங்கள் பலரும் முன்னெடுக்கிறார்கள். உண்மையில் ஒரு சமூக பிரச்னையை திரைப்படமாக எடுப்பது நல்ல விஷயம் தான், ஆனால் இந்த விஷயத்தில் இதை தமிழ்நாட்டுல் தமிழ் சினிமா முன்னெடுத்திருக்க வேண்டும்.

தமிழ் சினிமா பிரம்மாக்கள் மறந்தாலும், ஒரு சாதனை தமிழனின் வரலாறு, ஒரு இந்தி திரைப்படமாக உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படுவது தமிழர்களுக்கு பெருமையே, மேலும் நம் தமிழரின் கதை, பாலிவுட்டில் எடுக்கப்பட்டு, அனைவராலும் பாராட்டப்பட்டு வருவது, கோவைக்கு கிடைத்த பெருமையே. தமிழ் சினிமாவில் கதையே இல்லையென்று புலம்பும் நேரத்தில், தமிழகத்தின் உண்மை கதைகளை, பாலிவுட்டிலிருந்து வந்து படமெடுத்து, நமக்கே போட்டு காட்டுவது, இங்குள்ள சினிமா ஆளுமைகளை இத்திரைப்படம் யோசிக்க வைத்திருக்கும். இருப்பினும் ஒரு தமிழனின் பெருமைகளை ஒரு இந்தி"யன்" உலகறியச் செய்திருப்பது, நாப்கின் நாயகன் முருகானந்தத்திற்கு, தேசிய விருதிற்கு நிகரான பெருமையை கொடுத்திருக்கும் என்றால் அது மிகையாகாது.

இணைப்புச் செய்திகள்...

பேடுமேன் படத்தை, பாக்கிஸ்தானில் வெளியிட அனுமதி கோரி, அந்நாட்டு தணிக்கை வாரியத்துக்கு அனுப்பப்பட்டது, படத்தை பார்த்த, பாக்கிஸ்தான் திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினர்கள், "கலாசாரம், சமூகம் அல்லது மதத்திற்கு எதிரான விஷயங்களில் தயாரான படங்களை வெளியிட அனுமதிக்க முடியாது, இந்த திரைப்படம் தடை செய்யப்பட்ட கருத்தை மையமாகக் கொண்டுள்ளது" எனக் கூறி சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டனர். மேலும், பேட்மேன் படத்தில் முருகானந்தம் கேரக்டரை ராஜபுத்திரர் இனத்தை சேர்ந்தவராக காட்டியிருக்கிறார்கள் என ட்விட்டரில் ஒரு சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது.

You'r reading பாலிவுட் கொண்டாடும் சாதனை மனிதன் “தமிழன் முருகானந்தம்” Originally posted on The Subeditor Tamil

More Special article News

அண்மைய செய்திகள்