பில் கட்டாததால் 5 மாதங்களாக தாயையும் சேயையும் பிரித்துவைத்த மருத்துவமனை

Feb 15, 2018, 10:11 AM IST

லிப்ரவில்: பிரசவத்திற்கான பில்லை கட்டாததால் ஐந்து மாதங்களாக குழந்தையை பெற்ற தாயிடம் தர மருத்துவமனை மறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்கா, காபான் நாட்டை சேர்ந்தவர் சோனியா ஓகோம். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சோனியாவிற்கு அந்நாட்டில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சோனியாவிற்கு எடை குறைவாக குழந்தை பிறந்தது.

இதனால், குழந்தையை 35 நாட்களுக்கு இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், டிஸ்சார்ஜ் செய்யும் அன்று மருத்துவமனை கட்டணமாக ரூ.2.5 லட்சம் கட்ட வேண்டும் என சோனியாவிற்கு கூறப்பட்டுள்ளது. ஆனால், அவ்வளவு பெரிய தொகை கொடுக்கும் அளவிற்கு பண வசதி இல்லை என்று சோனியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், முழு பணத்தையும் கட்டினால் தான் குழந்தையை தருவதாக மருத்துவமனை திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால், சோனியா மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பான செய்தி இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து, சோனியாவிற்காக பலர் உதவிக்கரம் நீட்டினர். இதன்மூலம், பில் கட்டணம் கட்டப்பட்ட பிறகு மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை சோனியாவிடம் ஒப்படைத்தது.

பணத்திற்காக ஐந்து மாதங்களாக குழந்தையை தாயிடம் இருந்து பிரித்து வைத்த குற்றத்திற்காக மருத்துவமனை இயக்குனரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். பின்னர், சோனியா ஓகோம் கேட்டுக் கொண்டதை அடுத்து போலீசார் அவரை விடுவித்தனர்.

பெற்ற குழந்தையை தாயிடம் சேர்க்காமல் பணத்திற்காக ஐந்து மாதங்களாக பிரித்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You'r reading பில் கட்டாததால் 5 மாதங்களாக தாயையும் சேயையும் பிரித்துவைத்த மருத்துவமனை Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை