பக்கோடா கடை திறப்பதற்கு கடன் தரமறுக்கிறார்கள் என்றும், பிரதமரிடம் கூறி எனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, லக்னோ இளைஞர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, “இன்றைய தினம் இளைஞர்கள் பக்கோடா விற்று தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்றால் அதுவும் கூட வேலைவாய்ப்புதான்” என்றார்.
இது சமூகவலைத் தளங்களில் வைரல் ஆனது. வேலைவாய்ப்பு தொடர்பாக ஒரு பிரதமர் இப்படித்தான் பதில் அளிப்பதா? என்று கண்டனங்கள் எழுந்தன.
பிச்சை எடுப்பதைவிட ‘பக்கோடா’ விற்பது ஒன்றும் மோசமல்ல: வேலை இல்லாமல் இருப்பதைவிட பக்கோடா விற்கலாம்; பக்கோடா விற்பது எவ்வளவோ மேலானது. பக்கோடா விற்பதில் எந்த அவமானமும் இல்லை” என்று கூறியிருந்தார். பக்கோடா விவகாரம் நாடு முழுவதும் தொடர்ந்து விவாதிக்கப்படும் விஷயமாக மாறியிருக்கிறது.
இந்நிலையில் லக்னோவைச் சேர்ந்த அஸ்வின் மிஸ்ரா என்ற இளைஞர், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ரானிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பக்கோடா கடை வைப்பதற்கு தனக்கு உதவுமாறு அவர் கேட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், “என்னுடைய வேலை தேடும் படலம் இதோடு முடிந்தது; பிரதமரின் பேச்சைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்; இனி நானே பக்கோடா கடை திறக்கப் போகிறேன்; இதன்மூலம் நான் பிறருக்கும் வேலைக் கொடுப்பேன்; மோடி சிறப்பாக பேசி இருக்கிறார்.
வேலை இல்லாமல் இருப்பதற்குப் பக்கோடா விற்பது நல்லது என்பதை உணர்ந்துள்ளேன்ம். தினமும் 200 ரூபாய்க்கு அதிகமாகவே கிடைக்கும் என்பதால்தான், இந்த வேலையை தான்செய்வதற்கு முன்வந்திருப்பதுடன், வேலை இல்லாமல் இருக்கும் தனது நண்பர்களையும் செய்யச் சொல்லப் போகிறேன்.
பக்கோடா கடை வைப்பதற்காக நான் கடன் கேட்டுச் சென்றேன். கிட்டத்தட்ட எல்லா வங்கியிலும் கடன் கேட்டேன்; ஆனால் அவர்கள் கடன் கொடுக்கவில்லை; இதற்கெல்லாம் கடன் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்; இதனால் எனக்கு மனம் உடைந்து விட்டது.
பிரதம மந்திரியின் மக்கள் நல நிதி இருப்பதையும், அதிலிருந்து ரூ.10 கோடி மக்களுக்கு நிதி கொடுக்கப்பட்டதாக பிரதமர் மோடியே பேசி இருக்கிறார். அந்த பிரதம மந்திரி மக்கள் நல நிதியிலிருந்தாவது கொஞ்சம்பணத்தை தனக்கு கொடுத்து தொழில் தொடங்க உதவினால் நன்றாக இருக்கும்; இதுகுறித்து நீங்கள் பிரதமர் மோடியிடம் பேசவேண்டும்” என்று எழுதி அனுப்பியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.