கேரளாவில் லாக்டவுன் காலத்தில் தற்கொலை செய்த மாணவ, மாணவிகள் எத்தனை பேர் தெரியுமா?

by Nishanth, Oct 27, 2020, 12:27 PM IST

கேரளாவில் லாக்டவுன் காலத்தில் மட்டும் 173 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் மாணவிகள் தான் அதிக அளவில் தற்கொலை செய்ததாக கூறப்பட்டுள்ளது. தற்கொலை செய்தவர்களில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிகளவில் உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.கேரளாவில் லாக்டவுன் தொடங்கியது முதல் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்வது அதிகரித்து வந்தது. இதையடுத்து தற்கொலைக்கான காரணம் குறித்து கண்டுபிடிப்பதற்காக ஏடிஜிபி ஸ்ரீலேகா தலைமையில் ஒரு குழுவை கேரள அரசு நியமித்தது. இக்குழு கேரளா முழுவதும் ஆய்வு செய்து அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு: லாக்டவுன் தொடங்கியதின் பின்னர் கடந்த வாரம் வரை கேரளாவில் 173 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கு மன அழுத்தம் தான் முக்கிய காரணமாக உள்ளது. திருவனந்தபுரம், ஆலப்புழா, மலப்புரம், வயநாடு மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் தான் தற்கொலைகள் அதிக அளவில் நடந்துள்ளன. 10க்கும், 18 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் தான் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஏமாற்றம், தனிமை, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், செல்போன் மற்றும் இன்டர்நெட்டை அதிக அளவில் பயன்படுத்துவது, காதல் தோல்வி, பெற்றோர்கள் திட்டுவது ஆகியவையும் தற்கொலைக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

41 பேரின் தற்கொலையில் இந்த குழுவால் எந்த காரணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்கொலை செய்தவர்களில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் நன்றாக படிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இவர்களில் ஜனாதிபதியிடம் விருது வாங்கியவர்களும் உள்ளனர். பெற்றோர் திட்டியதால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்தவர்களில் மாணவர்கள் தான் அதிகமாகும். தேர்வில் தோல்வி பயம், பாலியல் வன்முறை ஆகியவை மாணவிகளின் தற்கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. தற்கொலை செய்தவர்களில் 40 சதவீதம் பேர் மேல்நிலை படிக்கும் மாணவ மாணவிகள் ஆவர்.

தற்கொலை செய்தவர்களில் 90 பேர் மாணவிகள் ஆவர். 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களில் 108 பேர் தற்கொலை கொண்டுள்ளனர். பெரும்பாலும் வீடுகளில் வைத்துத் தான் தற்கொலை செய்துள்ளனர். சிறிய குடும்பங்களில் உள்ளவர்கள் தான் அதிகமாக இந்த சோக முடிவை தேடியுள்ளனர். 132 பேர் இது போன்ற சிறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தற்கொலை செய்தவர்களில் 141 பேருக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படி அளவுக்கு மன ரீதியாக பிரச்சனை எதுவும் கிடையாது. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பங்களில் தான் அதிக அளவில் தற்கொலைகள் நடந்துள்ளன. ஆசிரியர்களும், பெற்றோரும் மாணவ மாணவிகளின் பிரச்சினைகளை முறையாக அணுகுவதில்லை. இவர்கள் சரியாக கவனித்து இருந்தால் தற்கொலைகளை தடுத்திருக்க முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading கேரளாவில் லாக்டவுன் காலத்தில் தற்கொலை செய்த மாணவ, மாணவிகள் எத்தனை பேர் தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை