ஸ்ட்ரெக்ட்சர் இல்லை: காயமுற்றவர்களை போலீஸ் என்ன செய்தது தெரியுமா?

by SAM ASIR, Nov 19, 2020, 13:37 PM IST

மத்திய பிரதேசத்தில் விபத்தில் காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு போதிய எண்ணிக்கையில் ஸ்ட்ரெக்ட்சர் இல்லாத காரணத்தால் போலீஸார் உதவிய விதம் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது. காவல்துறை உங்கள் நண்பன் என்பதை நிரூபிக்கும்விதமாக உடனடியாக களப்பணியாற்றிய போலீஸ் துறையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் ஜபல்பூர் அருகே கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஏறக்குறைய 35 தொழிலாளர்கள் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். திடீரென வாகனம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதில் அவ்வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த தொழிலாளிகள் படுகாயமுற்றனர்.

விபத்தை குறித்து தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு சென்றபோது, காயமுற்றவர்களை உள்ளே கொண்டு செல்வதற்கு போதிய எண்ணிக்கையில் ஸ்ட்ரெக்ட்சர்கள் இல்லாதது தெரிய வந்தது. காயமுற்றவர்களுக்கு உடனடி சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ் சென், எல்.ஆர். பட்டேல் ஆகியோரும், அசோக், ராஜேஷ் ஆகிய போலீஸ்காரர்களும் அவர்களை சுமந்து சென்று மருத்துவமனைக்குள் சேர்த்துள்ளனர். காயமுற்ற முதிய பெண்மணி ஒருவரை உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் சென் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

தற்போது 57 வயதாகும் சந்தோஷ் சென், கடமை தவறாக போலீஸ் அதிகாரி ஆவார். 2006ம் ஆண்டு அவர் நரசிங்பூர் மாவட்டத்தில் பணியில் இருந்தபோது குற்றவாளி ஒருவனை பிடிக்கச் சென்று வலது தோளில் குண்டு காயம் பட்டுள்ளார். தற்போது காயமுற்றவர்களை சுமந்து சென்று கடமையாற்றியுள்ளார். உதவி செய்த போலீஸ்காரர்களை பாராட்டியுள்ள ஜபல்பூர் ஐஜி பகவத் சிங் சௌகான், அவர்களுக்கு பாராட்டு பத்திரமும் ரூ.1000/- ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

You'r reading ஸ்ட்ரெக்ட்சர் இல்லை: காயமுற்றவர்களை போலீஸ் என்ன செய்தது தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை