டிராக்டர் பேரணியில் வன்முறை டெல்லி போலீஸ் அமைதி காத்ததற்கு என்ன காரணம்?

by Nishanth, Jan 28, 2021, 13:04 PM IST

குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் அணிவகுப்பு வரலாறு காணாத வன்முறையில் போய் முடிந்தது. இதில் 26 வயதே ஆன ஒருவர் பரிதாபமாக இறந்தார். போலீசார் உள்பட நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் வருவது தெரிந்தும் டெல்லி போலீசார் ஏன் அமைதி காத்தனர் என்பது குறித்துத் தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த குடியரசு தினம் இந்தியாவின் சரித்திரத்தில் ஒரு கறுப்பு நாளாக அமைந்து விட்டது. மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கி டிராக்டர் அணிவகுப்பை நடத்துவோம் என்று பல வாரங்களுக்கு முன்பே கூறியிருந்தனர். இந்த அணிவகுப்பை எளிதில் தடுத்து விடலாம் என்று தான் முதலில் டெல்லி போலீசார் கருதினர்.

கண்டிப்பாக இந்தப் போராட்டத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும், நீதிமன்றம் கண்டிப்பாக அணிவகுப்புக்கு அனுமதி கொடுக்காது என்றும் தான் டெல்லி போலீசார் கருதியிருந்தனர். ஆனால் அணிவகுப்புக்கு தடை விதிக்க முடியாது என்றும், அது குறித்து டெல்லி போலீஸ் தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. இதையடுத்து வேறு வழியில்லாமல் டிராக்டர் அணிவகுப்புக்கு டெல்லி போலீஸ் அனுமதி வழங்கியது. அதற்கு முன்னதாக விவசாய சங்கத்தினருடன் டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். குடியரசு தினத்தன்று அணி வகுப்பு முடிந்த பின்னர் பகல் 12 மணிக்குத் தான் டிராக்டர் அணிவகுப்பை தொடங்க வேண்டும் என்றும், தாங்கள் கூறும் பாதையில் மட்டுமே டிராக்டர்கள் செல்ல வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்தனர். அதற்கு விவசாய சங்கத்தினர் ஒப்புக் கொண்டனர். இதன் பிறகே டிராக்டர் அணிவகுப்புக்கு போலீசார் அனுமதி அளித்தனர்.

ஆனால் போலீசாரிடம் கூறியதன் படி விவசாயிகள் நடந்து கொள்ளாமல் காலை 8 மணிக்கே அணிவகுப்பை தொடங்கினர். மேலும் போலீசார் குறிப்பிட்டிருந்த பாதையில் செல்லாமல் வேறு பாதையில் விவசாயிகள் டிராக்டர்களுடன் டெல்லி நோக்கி புறப்பட்டனர். விவசாயிகளின் இந்த நடவடிக்கை தான் போராட்டம் வன்முறையில் முடிந்ததற்கு காரணமாகும். பல இடங்களில் போராட்டக்காரர்கள் போலீசாரை விரட்டி விரட்டி அடித்தனர். போராட்டக்காரர்கள் முன் போலீசார் கைகூப்பி திரும்பிச் செல்லுமாறு வேண்டினர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து செங்கோட்டையின் 15 அடி உயர மதில் சுவரை தாண்டி ஏராளமான போலீசார் தப்பி ஓடினர். தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இவ்வளவு வன்முறை நடந்தும் டெல்லி போலீசார் ஏன் அமைதி காத்தார்கள் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு காரணம் உண்டு என்று கூறுகின்றனர் டெல்லி போலீசார்.

பாதை மாறிய போராட்டம்

வன்முறையை தடுக்காமல் இருந்ததற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன என்று டெல்லி போலீசார் கூறுகின்றனர். தலைநகர் டெல்லியில் பொதுவாகவே முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அன்று குடியரசு தினம் என்பதால் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராஜ்பத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான டெல்லி போலீசார் தவிர மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 50 பட்டாலியன்களும், இந்தோ திபெத்திய எல்லை காவல் படையின் 17 பட்டாலியன்களும், எல்லை பாதுகாப்பு படையின் 28 பட்டாலியன்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அவர்கள் செல்வதாக தெரிவித்திருந்த பாதையில் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் விவசாயிகள் தங்களுக்கு அளித்த வாக்குறுதியின் படி நடந்துகொள்ளவில்லை என்று கூறுகின்றனர் டெல்லி போலீசார்.

இது குறித்து டெல்லி போலீசை சேர்ந்த சில முக்கிய அதிகாரிகள் கூறியது: குறிப்பிட்ட பாதையில் இருந்து மாறி மாற்றுப் பாதையில் அவர்கள் சென்றனர். டிராக்டர்களில் மட்டுமல்லாமல் குதிரைகளிலும் அவர்கள் டெல்லி நகருக்குள் நுழைந்தனர். அதுமட்டுமில்லாமல் பகல் 12 மணிக்குப் பதிலாக காலை 8 மணிக்கே அவர்கள் அணிவகுப்பை தொடங்கினர். இதனால் பல இடங்களில் நாங்கள் அவரை தடுத்தோம். மாற்றுப் பாதையில் செல்லாமல் இருப்பதற்காக பல இடங்களில் தடுப்பு வேலிகளை அமைத்து இருந்தோம். பஸ்கள், டிரக்குகள் உள்பட வாகனங்களையும் ரோட்டின் குறுக்கே நிறுத்தி இருந்தோம். ஆனால் அதை எல்லாம் மீறி விவசாயிகள் டெல்லி நகருக்குள் நுழைந்தனர். போலீஸ் பாதுகாப்பு போடப்படாத பாதை வழியாகவும் அவர்கள் சென்றனர். இதனால் அவர்களை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. போலீஸ் எண்ணிக்கையை விட அவர்கள் மிக அதிகமாக இருந்தனர். இதனால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

உளவுத்துறை என்ன செய்தது?

டெல்லி கலவரத்திற்கு உளவுத்துறையின் கவனக் குறைவு தான் காரணம் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. எனவே உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் இந்தப் போராட்டத்தை பயன்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கலாம் என்று டெல்லி போலீசுக்குஉளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அடிக்கடி தகவல்கள் பரிமாறப்பட்டன என்றும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உளவுத்துறை தங்களுக்கு முறையான தகவல்களைத் தரவில்லை என்று டெல்லி போலீசார் கூறுகின்றனர். 50 விவசாய சங்கங்களில் 90 சதவீதம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீதமுள்ள 10 சதவீதம் பேர் அவர்களுடன் கருத்து வேறுபாட்டில் இருந்து வந்தனர். இவர்கள் தான் சிக்கலை உருவாக்கினர். விவசாயிகளை போராட்டத்திற்கு தூண்டியதும் இவர்கள் தான். இந்த தகவலை உளவுத்துறை எங்களிடம் தெரிவிக்கவில்லை. இதனால் போதிய முன்னேற்பாடுகள் எதுவும் செய்ய முடியவில்லை என்று டெல்லி போலீசார் கூறுகின்றனர்.



மென்மையாக அணுக உத்தரவு

போராட்டக்காரர்களை ஒடுக்க கடுமையான முறைகளை பின்பற்ற வேண்டாம் என்று ஏற்கனவே தங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் கூறின. ஆயுதங்கள் எதையும் பயன்படுத்த எங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தான் கண்ணீர் புகை குண்டு மற்றும் லத்தியை மட்டுமே பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டது. இதுவும் வன்முறை அதிகரிக்க காரணமாக அமைந்து விட்டது. அதுவும் டெல்லியின் முக்கிய பகுதிக்கு நுழைந்த பின்னர் மட்டுமே வேறு வழியின்றி தடியடி நடத்தப்பட்டது. பல இடங்களில் தங்களிடம் ஆயுதம் இருந்தும் போலீசார் போராட்டக்காரர்களிடம் கைகூப்பி திரும்பிச் செல்லுமாறு கூறும் நிலையும் இருந்தது. ஆனாலும் போராட்டக்காரர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. பல பகுதிகளில் போலீசார் காயம் அடைந்ததற்கும் இது தான் காரணமாகும். இவ்வாறு டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

You'r reading டிராக்டர் பேரணியில் வன்முறை டெல்லி போலீஸ் அமைதி காத்ததற்கு என்ன காரணம்? Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை