முதல் 2 நாளில் பேட்டிங்குக்கு சாதகம் கடைசி நாட்களில் பவுலிங் சூப்பர் சேப்பாக்கம் பிட்ச் ஏன் இப்படி மாறியது?

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் அதிர்ஷ்ட மைதானங்களில் ஒன்றான சென்னை சேப்பாக்கம் மைதானம் இப்படி மாறும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கலாம் எனக் கருதி இருந்த இந்திய அணிக்குப் பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் 227 ரன்கள் என்ற மாபெரும் தோல்வி கிடைத்துள்ளது.சென்னை டெஸ்ட் போட்டியில் ரமேஷ் குமார் என்பவர் தான் பிட்ச் அமைத்துள்ளார். இது இவர் அமைத்த முதல் பிட்சாகும். சென்னையில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக ரமேஷ் குமார் என்ன கூறினார் தெரியுமா? இங்கிலாந்திலுள்ள பிட்சுகளுக்குச் சமமான ஒரு பிட்சைச் சென்னையில் அமைக்கவே நான் முயற்சி செய்கிறேன் என்றார்.

ரமேஷ் குமார் இவ்வாறு கூறியது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தன்னுடைய முதல் பிட்சை இந்தியாவுக்குச் சாதகமாகவே அமைத்திருப்பார் என்றே அனைவரும் கருதினர். ஆனால் முதல் இரண்டு நாட்களிலேயே சேப்பாக்கம் பிட்ச் தன்னுடைய தனி குணத்தைக் காட்டிவிட்டது.முதல் இரண்டு நாட்கள் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமாக பிளாட் பிட்ச் ஆக இருந்தது. ஆனால் 3வது நாள் முதல் பிட்ச் உழுது போட்ட நிலம் போல ஆகிவிட்டது. ஆங்காங்கே விரிசல்கள் ஏற்படத் தொடங்கின. இது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்து விட்டது. இதன் மூலம் டாசில் தோல்வியடைந்தது போலவே போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்தது.

முதல் நாள்

மும்பை வான்கடே மைதானத்தைப் போலவே பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் வகையில் சிவந்த மண் உள்ள விக்கெட் தான் முதல் டெஸ்டுக்காக சென்னையிலும் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் சென்னையில் உள்ள சிவப்பு மண்ணால் ஆன பிட்சை பாரம் அதிகமான ரோலரை பயன்படுத்தி ரோல் செய்ததால் அது பிளாட் விக்கெட்டாக மாறியது. இப்படி பிளாட் விக்கெட்டாக மாறினால் முதல் 2 நாட்களுக்கு பேட்டிங்குக்குத் தான் சாதகமாக அமையும். இது நன்றாகத் தெரிந்ததால் தான் டாஸ் கிடைத்தவுடன் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் எந்த சந்தேகமும் இல்லாமல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் மூலம் முதல் நாளில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்கள் குவித்தது. முதல் நாளிலேயே ஜோ ரூட் சதம் அடித்தார்.

இரண்டாவது நாள்

உணவு இடைவேளை வரை பிட்சில் பெரிதாக மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.ஆனால் அதற்குப் பின்னர் பிட்சில் லேசாக விரிசல்கள் ஏற்படத் தொடங்கின. இதன் பின்னர் ஷஹ்பாஸ் நதீமின் பந்துகள் வழக்கத்தை விடக் கூடுதலாக பவுன்சாகவும், சுழலவும் செய்தது. அப்போது பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி வந்தார். ஆனால் தேநீர் இடைவேளைக்குப் பின்னர் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகத் தொடங்கியது. இதனால் தான் இஷாந்த் சர்மாவும், பும்ராவும் சிறப்பாகப் பந்து வீசினர். இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 558 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் இரட்டை சதம் அடித்தார்.

மூன்றாவது நாள்

பிட்சில் விரிசல்கள் மேலும் அதிகரிக்கத் தொடங்கின. பொடி மணல் மெதுவாக மேலே எழும்பத் தொடங்கியது. வழக்கமான கிடைக்க வேண்டிய ஸ்விங் எடுபடவில்லை. பிளாட் பிட்சிலும் தன்னுடைய கூடுதல் வேகத்தின் மூலம் பவுன்சர்களை வீசும் ஆர்ச்சருக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தன. உணவு இடைவேளைக்குப் பின்னர் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாகத் தொடங்கி விட்டது. கிரீசை சுற்றிலும் கரடுமுரடாக தொடங்கியது. டாம் பெஸ்சின் பந்துகள் எதிர்பாராத விதமாக பவுன்ஸ் ஆகத் தொடங்கியது. ஜேக் லீச்சின் பந்துகள் திடீர் திடீரென திரும்பத் தொடங்கியது. 3ம் நாளில் இந்தியா 257 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது.

நான்காவது நாள்

இங்கிலாந்து புதிய பந்தை எடுத்த பிறகும் பிட்சில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதே நிலை தொடர்ந்து நீடித்தது. மறுமுனையில் 2வது இன்னிங்சில் அஷ்வினுக்கு முதல் பந்திலேயே விக்கெட் கிடைத்தது. இந்திய பிட்சில் மட்டுமே காணப்படுகின்ற புதிய பந்துக்குக் கிடைக்கும் 'நியூ பால் டேர்ன்' ஆகும். அப்போது பிட்ச் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறி விட்டது. பிட்ச் முழுவதும் விரிசல்கள் ஏற்பட்டு விட்டது. எதிர்பாராமல் வரும் குறைந்த பவுன்ஸ் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியது. 4ம் நாள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள். வெற்றி பெறுவதற்குக் கடைசி நாளில் 331 ரன்கள் தேவைப்பட்டது.

ஐந்தாம் நாள்

அதிசயங்கள் எதுவும் நடைபெறவில்லை. ஜேக் லீச்சின் பந்துகள் தாறுமாறாக திரும்பத் தொடங்கின. ரிவர்ஸ் ஸ்விங்குக்கு பெயர் பெற்ற ஆண்டர்சன் அற்புதமாக பந்து வீசினார். ஆர்ச்சர் தவிர வேறு எந்த வேகப்பந்து வீச்சாளருக்கும் பவுன்ஸ் கிடைக்கவில்லை. பென் ஸ்டோக்சின் தாழ்வான பவுன்சில் கோஹ்லி அவுட் ஆன உடன் இந்தியாவின் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டு விட்டது.

பாரம் கூடிய மற்றும் பாரம் குறைந்த ரோலர்கள் தான் பிட்ச் அமைப்பதற்குச் சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிட்சில் பாரம் குறைந்த ரோலர்கள் பயன்படுத்துவது பிட்சின் வழக்கமான தன்மை நீடிப்பதற்கு உதவும். ஆனால் பாரம் அதிகமான ரோலரை பயன்படுத்தி பிட்சை சப்பாத்தி போல பரத்தினால் அது பிளாட் ஆகி விடும். இதன்மூலம் எதிர்பாராமல் வரும் பவுன்ஸ் மற்றும் பந்துகள் திரும்புவதைத் தவிர்க்கலாம். பாரம் அதிகமான ரோலர்களை பயன்படுத்துவதன் மூலம் பிட்சுகளில் விரிசல்கள் அதிகமாக வாய்ப்பு உண்டு. பேட்டிங் செய்யும் அணியின் கேப்டனின் அறிவுரையின்படி தான் எந்த ரோலரை பயன்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்படும்.

இரண்டாவது டெஸ்டின் பிட்ச் எப்படி இருக்கும்?

இதே சென்னையில் தான் வரும் 13ம் தேதி 2வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. தற்போது சேப்பாக்கத்தில் 8 பிட்சுகள் உள்ளன. இதில் 2 பிட்சுகள் தான் இந்த டெஸ்ட் தொடருக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் சிவந்த மண் உள்ள பிட்சில் தான் முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. 2வது பிட்சில் சிவந்த மண்ணுக்கு மேல் கருமை நிறம் கொண்ட களிமண்ணால் பூசி தயாரிக்கப்பட்டதாகும். இதற்கு மேல் புற்களும் குறைவாகவே இருக்கும். வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் இந்த பிட்சில் தான் அடுத்த போட்டி நடைபெற உள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!

READ MORE ABOUT :

/body>