வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் மாசு, தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் மாசு போன்றவை ஒரு குழந்தையில் ஆட்டிசம் குறைபாடு அதிகமாவதற்கான வாய்ப்பினை 78 விழுக்காடு கூட்டுகிறது என்று ஓர் ஆய்வு கூறுகிறது.
காற்று மாசு மற்றும் ஆட்டிசம் குறைபாடு இவற்றுக்கு இடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்யும் வண்ணம், ஆட்டிச பாதிப்புள்ள 124 குழந்தைகள் மற்றும் ஆரோக்கியமான 1,240 குழந்தைகள் கண்காணிக்கப்பட்டார்கள். சீனாவின் ஷாங்காய் நகரில் காற்றில் மாசுத்துகள்கள் உள்ள பகுதியில் பிறந்தது முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளை ஆய்வாளர்கள் பரிசோதித்தனர். அந்த ஆய்வில் இதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
ஆட்டிசம் (Autism) தமிழில் 'மதி இறுக்கம்' என்று குறிப்பிடப்படுகிறது. பேச்சுத் திறன் மற்றும் நடவடிக்கை குறைபாடு, ஆட்டிசம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பாதிப்பு உள்ள குழந்தைகள் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி அமைதியாக இருப்பார்கள். பெரும்பாலும் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் இந்தக் குழந்தைகள், சமுதாயத்தில் யாருடனும் பழக மாட்டார்கள். தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வார்கள். இந்தக் குறைபாடுள்ள குழந்தைகளால் தங்கள் தேவைகளை சரியான விதத்தில் வெளிக்காட்ட இயலாது. பல நேரங்களில் மற்றவர்களை கையைப் பிடித்து அழைத்துச் சென்று தங்களுக்குத் தேவையானவற்றைக் காட்டுவார்கள்.
இந்தக் குறைபாட்டுக்கான மரபணு பாதிப்பு உள்ள குழந்தைகளின் உணவுப் பாதையிலும், மூளையின் திசுக்களிலும் காற்றில் உள்ள மாசுத்துகள்கள் புகுந்து பாதிப்பை உருவாக்குகிறது. இதுபோன்ற நோய்க்காரணிகள் கட்டுப்படுத்தப்பட்டாலே ஆட்டிச பாதிப்பின் தீவிரத்தை குறைக்க முடியும்.
"ஆட்டிசம் குறைபாட்டிற்கான காரணங்கள் இன்னும் சரியான அறியப்படவில்லை. பரம்பரையாக இருக்கக்கூடிய கோளாறை, மாசடைந்த சுற்றுச்சூழல் அதிகப்படுத்துகிறது. குழந்தைகளின் மூளை, வளரக்கூடிய பருவத்தில் இருக்கும். சுற்றுச்சூழலில் இருக்கும் மாசு அவர்களது மூளையில் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
இதைக் குறித்து இன்னும் விரிவான ஆய்வு நடத்தப்படவேண்டும்," என்று சீனாவின் அறிவியல் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த ஸிலிங் குவா கூறுகிறார்.
ஆண்டுதோறும் 42 லட்சம் பேர் இறப்பதற்கு மாசடைந்த காற்றே காரணமாகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் இந்தியாவில், மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் காற்று மாசின் காரணமாகவே அநேகர் இளம் வயதிலேயே மரணத்தை தழுவுகின்றனர்.
காற்றில் உள்ள மாசு நுண்துகள்கள், எளிதில் நுரையீரலுக்குள் நுழைகிறது. பின்னர் இரத்த ஓட்டத்தில் கலந்து பல்வேறு தீவிர உடல்நலக்கேடுகளை உருவாக்குகின்றன. முழு கர்ப்ப காலத்திற்கு முன்பே பிரசவம், கற்றலில் தாமதம் மற்றும் இருதய கோளாறு ஆகியவையும் காற்றிலுள்ள மாசின் காரணமாகவே ஏற்படுகிறது.
காற்று மாசடைவதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், வரும் தலைமுறை அதிகமாய் பாதிக்கப்படும் என்பது நிதர்சனம்.