ஹாமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 4 - வது ஒரு நாள் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்ற நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்தியாவை பழி தீர்த்தது.
இரு அணிகளுக்கு இடையிலான 5 ஒருநாள் போட்டித் தொடரின் 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
பந்துவீச்சுக்கு சாதகமான ஹாமில்டன் மைதானத்தில் இந்திய வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற, 30.5 ஓவர்களில் 92 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
இந்திய தரப்பில் சகால் 18 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்னாகும்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 14.4 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அகுப்டில் 14 ரன்களிலும், வில்லியம்சன் 11 ரன்களிலும் புவனேஷ்குமாரிடம் ஆட்டம் இழக்க, டெய்லர் 37 ரன்களிலும், நிகோலஸ் 30 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வேகத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் சரிவுக்கு காரணமாக இருந்த போல்ட் ஆட்டநாயகனாக தேர்வானார்.
தொடர்ந்து 3 வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் 4-வது போட்டியில் நியூசிலாந்து ஆறுதல் வெற்றி பெற்று இந்தியாவை பழி தீர்த்துள்ளது நியூசிலாந்து .