இந்த ஆண்டு ஐபிஎல்லில் முதல் போட்டியில் இருந்தே சிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்து இருக்கிறது.
மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த ஆண்டு அரசியல்வாதிகளுக்கு திருவிழா காலம். கடந்த முறை பொதுத்தேர்தல் நடந்தபோது ஐபிஎல் போட்டிகள் தென்னாபிரிக்காவில் நடத்தப்பட்டன. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா என சந்தேகம் எழுந்தது. ஆனால் சந்தேகத்துக்கு இடமளிக்காமல் இந்தியாவில் தான் இந்த ஆண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது.
அதேநேரம் போட்டிக்கான அட்டவணை வெளியிடுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின் ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 12வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் 17 போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. முதல் போட்டி மார்ச் 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
முதல் 17 போட்டிகள் இரண்டு வார காலகட்டத்தில் மார்ச் 23 முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் 8 அணிகளும் தங்கள் சொந்த மைதானத்தில் விளையாட உள்ளன. ஐபிஎல் ஓப்பனிங் விழா சென்னையில் நடைபெறுவது தமிழக ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ள நிலையில் அதனை இரட்டிப்பாக்கும் வகையில் முதல் போட்டியிலேயே பலம் கொண்ட கோலியின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் சிஎஸ்கே எதிர்கொள்ளவுள்ளது.