‘அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்’ – ஹர்பஜன் சிங் அதிரடி ட்வீட்!

மும்பை இந்தியன்ஸ் உடனான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவிய நிலையில், ”தோல்வியின்றி வரலாறா” மற்றும் “அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்” என ட்வீட் போட்டு ஹர்பஜன் சிங் சென்னை ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியை தழுவியது. மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து மூன்று முறை ஜெயித்து ஹாட்ரிக் வெற்றிப் பெற்ற சென்னை அணி நேற்று தனது வெற்றியை பதிவு செய்ய முடியாமல் திணறியது.

மும்பை வான்கடே மைதானத்தில் போட்டி நடைபெற்றதால், நேற்றைய போட்டி மும்பை அணியின் வெற்றிக்கு சாதகமாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக கேதார் ஜாதவ் மட்டுமே 58 ரன்கள் குவித்தார்.

நேற்றைய போட்டியில் தோனியின் ஆட்டமும் சிறப்பாக அமையாதது சென்னை அணிக்கு பெரும் பலவீனமாக மாறியது. 21 பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் தோனி வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.

தொடக்கம் முதலே சென்னை அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், மும்பை அணியின் வெற்றி பிரகாசமானது.

இந்நிலையில், தோல்வியை சந்தித்த சென்னை அணியின் வீரர் தமிழ் புலவர் ஹர்பஜன் சிங், தனது ட்விட்டரில் ஒரு புதிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,” அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும். உலகில் தோல்விகள் காணாத வீரனே இல்லை, தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை. மோதி எழுவோம் நாங்கள், தமிழே வெறும் கைதட்டலை மட்டும் தாங்கள் நீங்கள்.. தோல்வியின்றி வரலாறா” என பதிவிட்டுள்ள ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிச்சயம் அடுத்த போட்டியில் சென்னை மீண்டும் வெற்றி பெறும் என ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதுகின்றன.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்