இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு `உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்' என்கிற அங்கீகாரத்தைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் கொடுத்து கௌரவப்படுத்தியிருக்கிறது இங்கிலாந்தின் விஸ்டன் இதழ்.
இங்கிலாந்தின் புகழ் பெற்ற விஸ்டன் இதழ் ஆண்டுதோறும் உலகின் சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டு கவுரவிக்கும். கிரிக்கெட்டின் முக்கிய இதழாக வெளிவரும் இந்த விஸ்டணில் கடந்த இரண்டு வருடமும் விராட் கோலி பெயர் இடம் பெற்றது.
அதேபோல், டாப் 5 வீரர்கள் வரிசையிலும் அவருக்கு விஸ்டன் இடம் கொடுத்திருக்கிறது. அந்தப் பட்டியலில் விராட் கோலியுடன் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், சாம் குரான், கவுன்டி போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற ரோரி பர்ன்ஸ் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணியின் டேமி பேமன்வுண்ட் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட ஐசிசியின் சிறந்த வீரர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்தவீரர் விருதுகளை கோலி வென்றிருந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் மூன்றுவிதமான போட்டிகளையும் சேர்த்து கோலி, 11 சதங்கள் உட்பட 2,735 ரன்கள் குவித்திருந்தார். அவரது சராசரி 67.35 ஆகும். அதேபோல், மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிர்தி மந்தனாவை விஸ்டன் தேர்வு செய்துள்ளது. ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் சிறந்த டி20 வீரராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.