கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 213 ரன்கள் குவித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து, விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநேரம் பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக ஹெண்ட்ரிச் கலாசென் சேர்க்கப்பட்டார். அதேபோல் வெக்கபந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் இன்றைய போட்டியில் களம் கண்டார்.
அதன்படி பெங்களூரு அணிக்கு விராட் கோலி - பார்த்தீவ் படேல் ஜோடி துவக்கம் தந்தது. இந்த ஜோடி மூன்று ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. 11 பந்துகளுக்கு 11 ரன்கள் எடுத்திருந்த பார்த்தீவ் நரேன் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பிறகு வந்த அக்ஸ்தீப் ஏமாற்றினாலும், கோலியுடன் மொயீன் அலி இணைந்தார். இருவரும் இணைந்து கொல்கத்தா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அதிரடியாக விளையாடிய மொயீன் அலி குல்தீப் யாதவ் வீசிய 16 ஓவரில் மட்டும் 26 ரன்கள் சேர்த்தார். பின்னர் அவர் 28 பந்துகளில் 66 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இதன்பிறகு கோலியும் அதிரடியாக விளையாடி ஐபிஎல் தொடரில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். 57 பந்துகளை சந்தித்த கோலி 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் சதம் கடந்த கோலி ஆட்டத்தின் கடைசி பந்தில் அவுட் ஆனார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது.