நேற்றைய ஐபிஎல் போட்டியில் தோனியின் ஆட்டம், ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
பெங்களூர், சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து, 161 ரன்கள் எடுத்தது. அதன் பின், களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறினர். ஆனால், கேப்டன் தோனி தனி ஒருவனாக நின்று, மரண பயத்தை காட்டினார். ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பந்து வீச்சை அடித்து துவம்சம் செய்த அவர், கடைசி ஓவரில் 4,6,6,2,6 ரன்கள் அடித்து தனது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது.
இருந்தபோதும், தோனி ஆட்டத்தை பார்த்து, அவரின் ரசிகர்கள் அதீத உற்சாகம் அடைந்துவிட்டனர். அவரது மரண மாஸ் ஆட்டத்தைக் கண்ட ரசிகர்கள், ''ராகுல் காந்தி, நரேந்திர மோடியை மறப்போம்...தோனிதான் அடுத்த பிரதமர்...'' என தங்களின் கொண்டாட்டத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தத் தொடங்கி விட்டனர். ட்விட்டரில் #DhoniForPM, #Dhoni போன்ற ஹேஷ்டேக்குகளை ட்ரெண்டாகி விட்டனர் ரசிகர்கள்.
‘’வருங்காலத்தில் மக்களவைத் தேர்தலில் தோனி போட்டியிட்டால், எங்கள் ஓட்டு தோனிக்கே’’ போன்ற பதிவுகள் இணையதளத்தை ஆக்கிரமித்து உள்ளன. பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் என தோனியை புகழ்ந்து சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணமாக உள்ளனர். அதோடு, தமிழ் திரைத்துறை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
தோனியின் நேற்றைய ஆக்ரோஷ ஆட்டமானது, ரசிகர்கள் மத்தியில் அவரை தேர்தலில் போட்டியிட்டு பிரதமர் பதவியில் அமரவைத்து விட்டது என்ற சொல்லலாம்.