சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் இறுதிப்போட்டி ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் லீக் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வரும் மே 12-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் லீக் இறுதிப் போட்டி நடைபெறுவதாக இருந்தது.
கட்டட விதிகளை மீறி, மைதானத்தில் உள்ள ஐ.,ஜே., மற்றும் கே., பார்வையாளர் மாடங்கள்(கேலரிகள்) கட்டப்பட்டுள்ளதால் கடந்த 2012ம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சி அவைகளுக்குத் தடையில்லா சான்று வழங்க மறுத்து வருகிறது. அதோடு, தமிழக அரசின் தடை அமலில் உள்ளது. ஏற்கனவே, மூன்று கேலரிகளை காலியாக வைத்துக் கொண்டு இறுதிப்போட்டியை நடத்த முடியாது என பிசிசிஐ நிர்வாகம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், இட வசதியை கருத்தில் கொண்டு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் இறுதிப்போட்டி ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை மைதானத்தில் இறுதிப்போட்டிக்கு பதிலாக முதல் தகுதி சுற்றுப்போட்டி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் உள்ளனர்.