ஐபிஎல் தொடர் முக்கிய கட்டத்தை எட்டி வருகிறது. ஒவ்வொரு அணியும் 10 போட்டிகளை கடந்து விளையாடி வருகின்றன. ப்ளே ஆஃப் சுற்றில் இடம்பிடிக்க வேண்டும் என அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருவதால் தொடர் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடர் முடிந்தவுடனே உலகக்கோப்பை போட்டிகள் ஆரம்பமாகிறது. உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடவுள்ள பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஓய்வு என்பது இல்லாமல் இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சனிக்கிழமை விளையாடிய மும்பை அணிக்கு அடுத்தப்போட்டி 6 நாள்கள் கழித்து, வரும் வெள்ளிக்கிழமை தான் நடைபெறுகிறது. அதுவும் சென்னை அணியுடன் மோதவுள்ளது. இந்த இடைவெளியை வீரர்களின் பணிச் சுமையைக் குறைக்க பயன்படுத்த முடிவு செய்த மும்பை அணி, வீரர்களுக்கு 4 நாள்கள் பயிற்சியிலிருந்து ஓய்வு வழங்கியுள்ளது. இந்த 4 நாள்களில் குடும்பத்தினரைப் பார்க்கச் செல்லலாம், ஊர் சுற்றலாம் ஆனால் பேட், மற்றும் பந்தை மட்டும் தொடக் கூடாது என வீரர்களுக்குச் செல்லமான உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள மும்பை அணி நிர்வாகி ஒருவர், ``ரோகித், பும்ரா, ஹர்திக், குயிண்டன் டி காக், மலிங்கா போன்ற மும்பை அணி வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விடுமுறை அவர்களது பணிச் சுமையைக் குறைக்க உதவும். வெளிநாட்டு வீரர்கள் சென்னையில் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். இந்திய வீரர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். வீரர்கள் நலன்தான் எங்களுக்கு எப்போதும் முக்கியம். அதற்குத்தான் முக்கியத்துவம் அளிப்போம். இந்த 4 நாள்கள் பேட் மற்றும் பந்தை தொடாமல் ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள் எனச் சொல்லியிருக்கிறோம்" எனக் கூறியுள்ளார். மும்பை அணியின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.