47வது ஐபிஎல் லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
கொல்கத்தா ஈடன் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.
தொடர் தோல்வியை தவிர்க்க முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அபாரமான ஆட்டத்தை ஆடியது.
கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் 76 ரன்களும், கிறிஸ் லின் 54 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸல் 40 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் விளாசி 80 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் அவருக்கு துணையாக சிங்கிள்ஸ் அடித்துக் கொடுத்த தினேஷ் கார்த்திக் 15 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி இமாலய இலக்கான 232 ரன்களை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது.
233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற அசாத்திய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் படு சொதப்பல் ஆட்டத்தை விளையாடினர்.
குயிண்டன் டி காக் டக் அவுட் ஆனார். கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்களில் அவுட் ஆக, மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.
6வது இடத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா மட்டும் கொல்கத்தா அணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்ய துவங்கினார்.
34 பந்துகளில் 9 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் விளாசி 91 ரன்கள் குவித்த நிலையில், கர்னே பந்துவீச்சில் ரஸலிடம் கேட்ச் கொடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 198 ரன்கள் மட்டுமே எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதனால் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மற்றொரு போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணி அடுத்த 4 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றால், பிளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது.