நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ள இத்தொடருக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் தகுதிபெற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 9 போட்டிகளில் விளையாட உள்ளன. இதில் தகுதி பெறும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையமுடியும். இந்தியா, தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மேலும், தனது பரம வைரியான பாகிஸ்தானை ஜூன் 16-ம் தேதி எதிர்கொள்கிறது.
இந்நிலையில் உலகக்கோப்பையில் இந்திய அணி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் கேப்டன் கங்குலி பேசியுள்ளார். அதில், ``விஜய் சங்கர் குறித்து நிறைய எதிர்மறை விமர்சனங்கள் வருகிறது. அதற்கு அவசியம் இல்லை என நினைக்கிறேன். ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் தான் உலககோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விஜய் சங்கர் பௌலிங் உலகக்கோப்பையில் அதுவும் இங்கிலாந்து ஆடுகளங்களில் எடுபடும். அதனால் அவரை ஓவராக விமர்சிக்க வேண்டாம். ரிசப் பான்டும் அணியில் இடம்பிடித்திருக்க வேண்டியவர் தான்.
ஆனால் அதுகுறித்து அவர் கவலைகொள்ள தேவையில்லை. அவருக்கு இன்னும் வயது இருக்கிறது. நிறைய உலககோப்பைகளில் அவர் விளையாடுவார். இந்திய அணிக்கு தேவை 7வது வரிசையில் சிறப்பாக விளையாடும் ஆல் ரவுண்டர் தான். அப்படி பார்த்தால் ஹர்திக் பாண்டியாவுக்கு தான் முதலில் இடம். அவருக்கு பிறகு தான் ஜடேஜாவுக்கு. பாண்டியா காயம் அடைந்தால் தான் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் இங்கிலாந்து பிட்சில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை களமிறக்க முடியும்" எனக் கூறியுள்ளார்.