உலகக் கோப்பை கிரிக்கெட் ரூட், பட்லர் சதம் வீண்... பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இங்கிலாந்து

World Cup cricket, Pakistan got thrill win against England by 14 runs:

by Nagaraj, Jun 4, 2019, 08:53 AM IST

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்களில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. கடைசிக் கட்டத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் பட்லர், ஜோ ரூட் ஆகியோரின் அதிவேக சதம் கை கொடுக்கவில்லை.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 6-வது லீக் ஆட்டம் நாட்டிங்காமில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய, இமாம் உல்ஹக் மற்றும் பகர் ஜமான் வலுவான தொடக்கம் கொடுத்தனர். பகர் ஜமான் 36 ரன் எடுத்திருந்த போது, மொயின் அலி வீசிய பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நிதானமாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல்ஹக் 44 ரன்னில் மொயின் அலியிடமே வீழ்ந்தார். அடுத்து வந்த முகமது ஹபீஸ் மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் அதிரடி ஆட்டம் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடியைத் தந்தது. இந்த ஜோடியில் அதிரடியால் பாகிஸ்தான் அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது.

அரைசதத்தை கடந்து 63 ரன் எடுத்திருந்த பாபர் ஆசாம் மொயின் அலியின் சுழலில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஆனால் தொடர்ந்து அதிரடி காட்டிய முகமது ஹபீஸ் தனது அரைசதத்தைக் கடந்து நிலைத்து நின்று ஆடி 84 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
பின்னர் ஆசிப் அலி 14 ரன்னிலும், சர்ப்ராஸ் அகமது 55 ரன்னிலும், வஹாப் ரியாஸ் 4 ரன்னிலும், சோயிப் மாலிக் 8 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்களை குவித்தது.இங்கிலாந்து அணியில் மொயின் அலி மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்களும், மார்க் வுட் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர்கள் ஜாசன் ராய் 8 ரன்னிலும், பேர்ஸ்டோல் 32 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் மோர்கன் 9 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 13 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனால் 118 ரன்களுக்கு 4 முன்னணி விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தத்தளித்தது.

ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர். நிலைத்து நின்று ஆடிய ஜோ ரூட் சதம் விளாசினார். ஜோ ரூட் 107 ரன்னில் கேட்ச் ஆகி வெளியேற மறுபுறம் நேர்த்தியாக ஆடிய ஜோஸ் பட்லர் சதம் அடித்தார். ஆனால் அடுத்த பந்திலேயே ஜோஸ் பட்லர் 103 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

அதன் பின் மொயீன் அலி 19 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸ் 21 ரன்னிலும், ஜோப்ரா ஆர்ச்சர் 1 ரன்னிலும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழக்க இங்கிலாந்து அணியின் நம்பிக்கை தகர்ந்தது.

இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 334 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பதிவு செய்தது.

உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 105 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக தோற்றது.இந்நிலையில் அடுத்த போட்டியிலேயே எழுச்சி பெற்ற பாகிஸ்தான், அபாரமாக ரன்களைக் குவித்து இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

You'r reading உலகக் கோப்பை கிரிக்கெட் ரூட், பட்லர் சதம் வீண்... பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இங்கிலாந்து Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை