பேட்டிங்.. பவுலிங்.. பீல்டிங்.. எல்லாமே சூப்பர் ஆஸி.யை தெறிக்க விட்ட இந்தியா

World Cup cricket, Indias strong batting and bowling helps to win against Australia in oval:

by Nagaraj, Jun 10, 2019, 09:11 AM IST

உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் அபார திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி ஆஸ்திரேலியாவை மிரளச் செய்தது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலகக்கோப்பை போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.லீக் சுற்றின் முதல் போட்டியில் தெ.ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, நேற்று 2-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. பலம் மிக்க ஆஸ்திரேலியாவுடனான இந்தப் போட்டி, இந்தியாவுக்கு சவாலானது என்பதால், வெற்றி பெறப் போவது யார்? பெரும் எதிர்பார்ப்புடன் இந்திய ரசிகர்கள் லண்டன் ஓவல் மைதானத்தில் குவிந்தனர். மைதானத்தில் இந்திய வீரர்களின் நீல நிற சீருடை போன்று ரசிகர்களும் அணிந்திருந்ததால், ஓவல் மைதானமே நீல நிறமாக ஜொலித்தது.

போட்டியில் டாஸ் வென்ற இந்திய காப்டன் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். நிதானமாக ஓபனிங்கை துவக்கிய ரோகித்தும், ஷிகர் தவானும் 10 ஓவர்களுக்குப் பின் அதிரடி காட்டத் தொடங்கினர். இருவரும் அரை சதத்தை கடந்து 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த போது ரோகித் 57 ரன்களில் அவுட்டானார். அடுத்து தவானுடன் கோஹ்லி கூட்டணி சேர அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

சிக்சர், பவுண்டரி என விளாசிய தவான் 95 பந்துகளில் சதமடித்து சாதித்தார். மறு முனையில் நிதானமாக அடித்து ஆடிய கோஹ்லியும் அரை சதமடித்தார். 109 பந்துகளில் 117 ரன்கள் குவித்து தவான் ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி காட்டுவற்காக பாண்ட்யா முன்னதாகவே களமிறக்கப்பட்டார். நம்பிக்கை வீண் போகாமல் பாண்ட்யா, ஆஸி. பந்து வீச்சை துவம்சம் செய்து மளமளவென ரன் வேகத்தை கூட்டினார். தன் பங்குக்கு 27 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து பாண்ட்யா வெளியேற, அடுத்து வந்த தோனியும் 14 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் கோஹ்லி 82 ரன்களில் அவுட்டாக, 50 ஓவர் முடிவில் 352 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது இந்தியா. இது உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிகபட்சமாக அடிக்கப்பட்ட ஸ்கோர் என்ற சாதனையையும் இந்தியா படைத்தது.

353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸி. அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பின்ச், வார்னர் ஆகியோர் களமிறங்கினர். பேட்டிங்கில் அசத்தியது போல் பந்துவீச்சு, பீல்டிங்கிலும் இந்திய வீரர்கள் அசத்தினர். இதனால் ஆஸி. வீரர்கள் ரன் குவிக்க சிரமப்பட்டனர். ஓபனிங் மோடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த போது, பின்ச் ரன் அவுட்டாக்கப்பட்டார். வார்னருடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் ஒரளவுக்கு நம்பிக்கை அளித்தார். இந்த ஜோடி ரன் வேகத்தை அதிகரிக்க முற்பட்ட போது, சகால் முட்டுக்கட்டை போட்டு வார்னரை 56 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து பும்ரா, புவனேஸ்குமாரின் ஆகியோரின் வேகத்தில் கவாஜா (42), ஸ்மித் (69), ஸ்டாய்னிஸ் (0), மேக்ஸ்வெல் (28) கூல்டர் நைல் (4) ஆகியோர் சீரான இடைவெளியில் வெளியேற, ஆஸி.அணியின் வெற்றி நம்பிக்கை தகர்ந்தது.

கடைசிக் கட்டத்தில் கேரி (55)அதிரடி காட்டினாலும் இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சு, பீல்டிங் காரணமாக 50 ஓவர் முடிவில் 316 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது ஆஸி.அணி .

இந்தியத் தரப்பில் பும் ரா, புவனேஸ்வர் குமார் தலா 3 விக்கெட்டுகளையும், சகால் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.சதமடித்த தவான் ஆட்ட நாயகனானார். நடப்பு உலக சாம்பியன் ஆஸி.அணியை வென்றதன் மூலம் இந்த உலகக் கோப்பை தொடரில் உற்சாக நடை போடத் தொடங்கியுள்ளது இந்திய அணி.

You'r reading பேட்டிங்.. பவுலிங்.. பீல்டிங்.. எல்லாமே சூப்பர் ஆஸி.யை தெறிக்க விட்ட இந்தியா Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை