இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் படம், பெயரை பயன்படுத்தி, தனது பொருட்களை அமோகமாக விற்று காசு பார்த்த ஆஸ்திரேலியா நிறுவனம் ஒன்று, ஒப்பந்தப்படி ரூ 15 கோடி தராமல் அவரை ஏமாற்றி விட்டது. இதனால் அந்த நிறுவனம் மீது ஆஸ்திரேலிய கோர்ட்டில் சச்சின் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
23 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக ஜொலித்த சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. தனது சாதனைகளால் உலகப்புகழ் பெற்ற சச்சினுக்கு, விளம்பரங்கள் மூலம் கோடி, கோடியாக பண மழை கொட்டியது. பெரிய பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டு, தங்கள் பிராண்ட் விளம்பரத் தூதராக நியமிக்க வரிசை கட்டி நின்றன.
இதனால் சச்சின் விளையாட்டில் உச்சத்தில் இருந்த காலத்தில், விளம்பர வருமானத்திலும் உச்சத்தை தொட்டார். ஒரு கட்டத்தில் உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு பிரபலங்களின் பட்டியலில் முன்னணியில் இருந்தார். அப்படி அவர் ஈட்டியது கொஞ்ச நஞ்சமல்ல. சச்சின் படம் போட்டு விற்றால் எந்தப் பொருளையும் விற்று விடலாம் என்பது தயாரிப்பாளர்களின் எண்ணமாகி விட்டது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை பயன்படுத்தும் கால் செருப்பு முதல் தொப்பி, டீ சர்ட், விளையாட்டு பொருட்கள் என எங்கெங்கு காணினும் சச்சின் படம் தான் இடம் பெற்று ஆயிரக்கணக்கான கோடிகளை அவருக்கும் வாரிக் கொடுத்தனர்.
2013-ல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் சச்சினின் மவுசு விளம்பர உலகில் குறையாமல் தான் இருந்து வருகிறது. இதனால் 2016-ல் ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் ஒன்று ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் ராயல்டி தருவதாகக் கூறி சச்சினுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த நிறுவனம் தயாரிக்கும் கிரிக்கெட் பேட் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அணியும் ஆடைகளுக்கு சச்சின் போஸ் கொடுத்து வாய்ஸ்சும் கொடுத்துள்ளார். இதனால் இந்தப் பொருட்கள் அமோக விற்பனை ஆனாலும், சச்சினுக்குத் தான் பேசிய தொகையில் ஒரு நயா பைசா கூட கொடுக்கவில்லையாம்.
இதனால் ஒப்பந்தப்படி பேசிய பணத்தை ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு பல முறை நோட்டீஸ் கொடுத்தும் எந்தப் பதிலும் கிடைக்காததால் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தத்தையே ரத்து செய்வதை சச்சின் அறிவித்துள்ளார்.
ஆனால் அதன் பின்னரும் அந்த நிறுவனம் சச்சின் விளம்பரத்துடன் தனது பொருட்களை இப்போது வரை விற்று வருகிறதாம். இதனால் கோபமாகிவிட்ட சச்சின், ஆஸ்திரேலிய நாட்டின் பெடரல் கோர்ட்டில் 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 15 கோடி ரூபாய்) பணத்தைக் கேட்டு அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் ராயல்டி விவகாரம் வழக்கில் வரும் 25-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி - தவான் திடீர் விலகல்