உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அடுத்து ஆடவுள்ள 3 போட்டிகளிலும் இந்தியாவே ஜெயிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்கின்றராம். என்னடா இப்படி இந்தியாவுக்காக பாகிஸ்தானியர்கள் பிரார்த்தனையா? என்று ஆச்சர்யமாக இருக்கிறதா?.,இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், இந்தியா வெற்றி பெற்றால்தான் பாகிஸ்தான் அரையறுதிக்குள் நுழைய முடியும் என்பது தானாம்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டன. அரையிறுதிக்குள் ஆஸ்திரேலியாறு நுழைந்து விட்டது. இந்தியாவும், நியூசிலாந்தும் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டன. ஆனால் நான்காவதாக அரையிறுதிக்குள் நுழைவது யார்? என்பதில் தான் பெரும் அடிதடியாக உள்ளது.
நான்காவது இடத்துக்கு முன்னேற இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நான்கு அணிகளுக்கு இடையே பெரிய மல்லுக்கட்டே நடக்கிறது. இதனால் அடுத்து நடக்கவுள்ள போட்டிகளின் வெற்றி, தோல்வியே இந்த அணிகளில் யார் அரையிறுதிக்குள் நுழைவது என்பதை நிர்ணயிக்கப் போகிறது என்பது தான் இதற்குக் காரணமாகும். தற்போது இங்கிலாந்து 8 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்து இந்தியா, நியூசிலாந்து அணிகளுடன் மோத வேண்டும். இரு போட்டியிலும் வென்றால் மட்டுமே இங்கிலாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு சாத்தியம்.
பாகிஸ்தான் 7 புள்ளிகளுடன் உள்ள நிலையில் அடுத்த இரு போட்டிகளில் வங்கதேசத்தையும், ஆப்கனையும் எதிர்கொண்டு இரு போட்டிகளிலும் வென்றாலும் 11 புள்ளிகள் கிடைக்கும். அதே போல் வங்கதேசமும் 7 புள்ளி களுடன் உள்ளது. மீதமுள்ள இரு போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் மோத வேண்டும்.இலங்கை 6 புள்ளிகளுடன் இருந்தாலும் இன்றைய ஆட்டத்தில் தோற்றாலும் இன்னும் 2 ஆட்டங்கள் பாக்கி உள்ளது. அதில் வென்றால் 10 புள்ளிகளுடன் அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்கும்.
இங்கு தான் மற்ற போட்டிகளின் முடிவுகளை இந்த 4 அணிகளும் கூட்டல் கழித்தல் கணக்குப் போடுகின்றன. அதிலும் முக்கியமாக பாகிஸ்தான் தான் இந்தியா அனைத்து போட்டிகளிலும் ஜெயிக்க வேண்டும் என தவமாய் தவமிருக்கிறது. ஏனெனில் வங்கதேசம், இலங்கை, இங்கிலாந்தை இந்தியா வீழ்த்தி விட்டால் போதும். அந்த அணிகளின் அரையிறுதி வாய்ப்பு தானாகவே மங்கி விடும். பாகிஸ்தானுக்கு அரையறுதி வாய்ப்பு எளிதாகி விடும் என்பது தான் இதற்கு காரணம்.
ஆனாலும் இந்தியா வீம்புக்காகவே இங்கிலாந்திடமோ, வங்கதேசத்திடமோ தோற்று, தங்களின் அரையிறுதி வாய்ப்பை கெடுத்தாலும் கெடுத்து விடும் என்ற ஒரு வித பீதியும் பாகிஸ்தான் வீரர்களிடம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் அப்பட்டமாகவே தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்து நடக்க உள்ள லீக் போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன என்றே கூறலாம்.என்ன நடக்கப் போகிறது என்பதையும் பார்க்கலாம் .