உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றில் விளையாடிய 9 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாத ஒரே அணி என்ற மோசமான சாதனையுடன் நாடு திரும்புகிறது ஆப்கன் அணி .எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து சவால் விட்டாலும் பினிசிங் செய்வதில் கோட்டை விட்டதால் சில வெற்றி வாய்ப்புகள் பறி போன சோகத்துடன் வெளியேறியுள்ளது. கடைசியாக மே.இந்திய தீவுகள் அணியுடன் ஆடிய போட்டியிலும் 312 ரன் என்ற இலக்கை கெத்தாக விரட்டிச் சென்று பினிசிங் செய்ய முடியாமல் 23 ரன்களில் தோல்வியைத் தழுவிய சோகம் நிகழ்ந்தது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 10 நாடுகள் பங்கேற்றன. ஒவ்வொரு லீக் சுற்றுப் போட்டியில் 9 போட்டிகளில் விளையாட வேண்டும். இந்த லீக் சுற்றுப் போட்டிகள் நாளையுடன் முடிவடைய உள்ளன. லீக் சுற்றில் 9 போட்டிகளிலும் ஆடி முடித்து விட்ட ஆப்கன் அணி, அனைத்து போட்டிகளிலும் தோற்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து, முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
கடைசிப் போட்டியில் மே.இந்தியத் தீவுகளை எதிர்கொண்ட ஆப்கன், ஆறுதல் வெற்றி பெற நடத்திய போராட்டமும் கைகூடாமல் போய்விட்டது. முதலில் பேட்டிங் செய்த மே.இந்திய தீவுகள் அணியில் லீவிஸ் (58),ஹோப் (77), பூரன் (58) ஆகியோரின் அரைசதத்தால் 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 311 ரன் குவித்தது.
இந்தப் போட்டியிலாவது வெற்றியை பதிவு செய்து விட வேண்டும் என அதிரடி காட்டினர் ஆப்கன் வீரர்கள் .ரஹ்மத் ஷா (62), இக்ரம் அலிகில் (86) ஜோடி அபாரமாக ஆடி மே.இந்திய தீவுகளுக்கு பீதி ஏற்படுத்தினர். இதனால் ஆப்கன் அணிக்கு நல்ல வெற்றி வாய்ப்பும் இருந்தது.ஆனால் அடுத்து வந்த வீரர்கள் அதிரடி காட்டத் தவறி சொற்ப ரன்களில் நடையைக் கட்ட 288 ரன்களில் ஆல் அவுட்டானது ஆப்கன் அணி . இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, இந்தத் தொடரிலிருந்து முதல் அணியாக ஆப்கன் வெளியேறியது.
இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், தான் ஆடிய பெரும்பாலான போட்டிகளில் எதிரணிக்கு சவால் விடும் வகையில் ஆப்கன் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினர் என்றே கூறலாம். போதிய அனுபவமின்மை, திட்டமிடல் இல்லாத காரணத்தாலேயே பினி சிங் ஓவர்களில் ஜொலிக்க முடியாமல், வெற்றி பெற வேண்டிய சில போட்டிகளில் வெற்றியை கோட்டை விட்டளர் என்றே கூறலாம்.