டி-20 போட்டி : மே.இ.தீவுகளை பந்தாடியது இந்தியா...! அறிமுகப் போட்டியில் அசத்திய சைனி

First T20 match against WI, India won by 4 wickets

by Nagaraj, Aug 4, 2019, 08:49 AM IST

மே.இ தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அறிமுகமான முதல் போட்டியிலேயே வேகத்தில் மிரட்டிய இந்தியாவின் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.


மே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி - 20, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு டி20 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர் ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது.


நேற்று நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும், அறிமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியும் சேர்க்கப்பட்டிருந்தனர்.


முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணிக்கு துவக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வீச, 2-வது பந்தில் கேம்பெலை டக் அவுட்டாக்கினார். அடுத்த ஓவரில் லூயி சும் ரன் ஏதும் எடுக்காமல் புவனேஷ்வரிடம் போல்டானார். அறிமுக வீரராக களமிறங்கி, சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதல் ஓவரை வீசிய நவ்தீப் சைனி, 4 மற்றும் 5-வது பந்துகளில் பூரன் (20), ஹெட்மயரை (0) ஆகியோரை அவுட்டாக்கி சாதித்தார். அடுத்து வந்த பாவெல் 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் 35 ரன்களுக்குள் முக்கிய 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்நிலையில் அணியை சரிவிலிருந்து மீட்க அனுபவ வீரரான பொல்லார்டு ஒரு முனையில் போராடினாலும் மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தது. கேப்டன் பிராத்வைட் (9), சுனில் நரைன் (2), கீமோ பால் (3) ஒற்றை இலக்கத்துடன் பெவிலியன் திரும்பினர். நீடிக்கவில்லை. ஆட்டத்தின் 20-வது ஓவரை வீசிய நவ்தீப் சைனி, 49 ரன்கள் எடுத்திருந்த பொல்லார்டை வெளியேற்டனாக்கினார். இதனால் மே.இ. அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 95 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்தப் போட்டியில் மே.இ.வீரர்கள் 7 பேர் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தனர். இந்தியா சார்பில் வேகத்தில் மிரட்டிய நவ்தீப் சைனி 3, புவனேஷ்வர் குமார் 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

வெற்றிக்கு 96 ரன்கள் தேவை என்ற எளிதான இலக்குடன் ஆடிய இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி களமிறங்கியது. தவான் 7 பந்தில் 1 ரன் எடுத்து அவுட்டானார். தாமஸ் பந்தில் சிக்சர் அடித்த ரோகித், காட்ரெல் ஓவரில் பவுண்டரி, சிக்சர் அடித்தார். 24 ரன் சேர்த்த நிலையில் சுனில் நரைன் சுழலில் சிக்கி அவுட்டானார். அடுத்து ரிஷப் பான்ட் வந்த வேகத்திலேயே 'டக்' அவுட்டாகி வெளியேறினார்.

மணிஷ் பாண்டே 19 ரன்களில் அவுட்டானார். கேப்டன் கோஹ்லி (19), குர்னால் பாண்ட்யா (12) ஆகியோரும் சோபிக்கவில்லை.

கடைசியில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 17.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து, 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் (8), ஜடேஜா (10) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கும் காரணமாக இருந்தார். மேலும் டி-20 போட்டியின் கடைசி ஓவரை மெய்டன் ஓவராக வீசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார். இதனால் சிறந்த ஆட்டக்காரர் விருதையும் சைனி தட்டிச் சென்றார்.


இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியும் புளோரிடாவின் இதே மைதானத்தில் இன்று இரவு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால், 3 போட்டி கொண்ட தொடரை கைப்பற்றிய சாதனையை படைக்கலாம்.

You'r reading டி-20 போட்டி : மே.இ.தீவுகளை பந்தாடியது இந்தியா...! அறிமுகப் போட்டியில் அசத்திய சைனி Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை