பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில், ஒரு விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி தென்னாப்பிரிகா அணி அபாரமாக சேஸ் செய்து இந்திய அணியை வீழ்த்தியது.
இந்தியா வந்துள்ள தென்னாப்ரிக்கா அணி டெஸ்ட், டி-20 மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறது.
டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்த நிலையில், நேற்று நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில், 1-1 என டி-20 தொடரும் டிரா ஆகியுள்ளது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து வெறும் 134 ரன்களுக்கு சுருண்டது.
துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிகர் தவான் 36 ரன்கள் என்ற நல்ல துவக்கத்தை தந்து அவுட் ஆனார். ஆனால், அவருக்கு பின் ஆடிய மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
ரோகித் சர்மா, கேப்டன் கோலி என இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களும் தலா 9 ரன்களுக்கு அவுட்டாகினர்.
ரிஷப் பந்த் 19 ரன்களுக்கும், ஸ்ரேயாஸ் அய்யர் 5 ரன்களுக்கும், ஹார்திக் பாண்டியா 14 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணியின் ஸ்கோர் சரிய காரணமாகினர்.
அதிகபட்சமாக தென்னாப்ரிக்க வீரர் ரபாடா 3 விக்கெட்டுகளையும், ஃபார்டின் மற்றும் ஹெண்ட்ரிக்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்ரிக்க அணியில் கேப்டன் குயிண்டன் டிகாக் ருத்ர தாண்டவம் ஆடினார். 52 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் விளாசி 79 ரன்கள் ஆட்டமிழக்காமல் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இதனால், 16.5 ஓவர்கள் முடிவில் தென்னாப்ரிக்க அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 140 ரன்கள் அடித்து அபார வெற்றியை பதிவு செய்தது.