தலைமை தேர்வு குழுவில் பணிபுரிந்த திலிப் வெங்சர்க்கார், இந்திய அணிக்கு விராட் கோலியை தேர்வு செய்ததனால் 2008ம் ஆண்டு தனது வேலையை இழந்ததாக தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டை சேர்ந்த எஸ்.பத்ரிநாத்க்கு பதிலாக விராட் கோலியை தேர்வு செய்ததனால் என்.ஸ்ரீனிவாசன் இவரை பணிநீக்கம் செய்ய பரிந்துரைத்ததாகவும், கோலியை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் விரும்பவில்லை என்றும் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
இது குறித்து மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்தகொண்ட பின் செய்தியாளர்களிடம் கூறியுள்ள அவர், “2008ஆம் ஆண்டும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்றது. அந்த நேரத்தில் இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
அப்போது நான் கோலியை தேர்வு செய்வது சரியாக இருக்கும் என்று கருதினேன். எனது இந்த முடிவை மற்ற நான்கு தேர்வாளர்களும் ஒத்துக் கொண்டார்கள். ஆனால், பயிற்சியாளர் கேரி கிற்ஸ்டனுக்கும், தோனிக்கும் விராட் கோலியை தேர்வு செய்வதை விரும்பவில்லை. நான் அவர்களிடமும் கோலியை அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்றேன்.
ஆனால், அவர்கள் எஸ்.பத்ரிநாத்தை அணியில் தேர்வு செய்வதிலேயே முனைப்புடன் இருந்தனர். ஏனென்றால், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தார். விராட் கோலி அணிக்கு வந்தால், பத்ரிநாத்தை தேர்வை செய்ய முடியாது. அந்த நேரத்தில் சீனிவாசன் பிசிசிஐ நிர்வாகியாக இருந்தார். பத்ரிநாத்தை தேர்வு செய்யாததால் அவர், வருத்தத்தில் இருந்தார்.
பிறகு சீனிவாசன், ‘எந்த விதத்தில் கோலியை தேர்வு செய்தீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். ’ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருந்தே, அவர் நன்றாக வளர்ந்து வருகிறார். தனிச்சிறப்பு மிக்க வீரராக இருக்கிறார். அதனால் அணியில் சேர்த்தேன்’ என்று நான் விளக்கினேன்.
அதற்கு சீனிவாசன், ‘பத்ரிநாத் தமிழக அணிக்காக 800 ரன்கள் குவித்துள்ளார்’ என்று விவாதம் செய்தார். நான் அவரிடம், ‘பத்ரிநாத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படும்’ என்றேன். அதன்பின் அவர், ‘எப்பொழுது வாய்ப்பளிப்பீர்கள்? இப்போதே பத்ரிக்கு 29 வயதாகிவிட்டது’ என்றார்.
நிச்சயம் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், எப்போது என்று கூற முடியாது என்று தெரிவித்தேன். அதற்கு மறுநாளே நான் தேர்வுக்குழுவில் இருந்து நீக்கப்பட்டேன். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, விராட் கோலி, ஐந்து போட்டிகளில் முறையே, 12, 37, 25, 54 மற்றும் 31 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், பத்ரிநாத் மூன்று ஆட்டங்களில் விளையாடி 27. 6, 6 ரன்கள் எடுத்திருந்தார். வெங்சர்க்கார் சுமார் 23 மாதங்கள் தலைமை தேர்வு குழுவில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.