முத்தரப்பு டி20 தொடரில் இந்திய அணி வங்கதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இலங்கை, இந்தியா, வங்கதேச அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடரில் நேற்றைய போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக லிட்டன் தாஸ் 34 ரன்களும், சபீர் ரஹ்மான் 30 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி வீரர்கள் நிறைய கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டனர். இதனை வங்கதேச வீரர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. மேலும், நிறைய பந்துகளை டாட் பந்துகளாக்கினர். மேலும் வங்கதேச அணியினர் 3 சிக்ஸர்களும், 12 பவுண்டரிகளும் மட்டுமே அடித்தனர்.
பின்னர் தொடர்ந்து ஆடிய இந்திய வீரர்களும், ஒருநாள் போட்டியைப் போலவே மிதமாக ஆடினர். 43 பந்துகளை சந்தித்த ஷிகர் தவான் 55 ரன்களை மட்டுமே எடுத்தார். அதேபோல சுரேஷ் ரெய்னாவும் 27 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து சோதித்தார். இந்திய அணி தரப்பிலும் 3 சிக்ஸர்கள் மட்டுமே அடிக்கப்பட்டது.
இதனால், ஆட்டத்தில் எந்தவித சுவாரஸ்யமோ, விறுவிறுப்போ இல்லாமல் மந்தமாக ஆட்டம் சென்றது. இறுதியில், 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகன் விருது விஜய் சங்கருக்கு வழங்கப்பட்டது.
இதில் ஒரே விஷயம் என்னவென்றால், இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிராக ஆடிய 5 டி20 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது.