11 பேர்.. 3 குழுக்கள்.. ரெய்னாவின் மாமா கொலையில் வெளியான அதிர்ச்சி பின்னணி

by Sasitharan, Sep 16, 2020, 18:53 PM IST

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டின் தரியால் கிராமத்தில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தையின் சகோதரி அதாவது ரெய்னாவின் அத்தை ஆஷா தேவி குடும்பத்தினர் தங்கியிருந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் ஆஷா தேவி குடும்பத்தினர் மீது மர்மநபர்கள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். இதில் ரெய்னாவின் மாமா அசோக் குமார் இறந்துவிட்டார். அவரின் அத்தை ஆஷா தேவியோ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெய்னாவின் மச்சான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளிகள் கண்டுபிடிக்காமலே இருந்தது. அதைவிட எதற்காக குற்றம் நடந்தது என்பதும் தெரியாமல் இருந்தது.

பல நாட்கள் கழித்து இதற்கு விடை கிடைத்துள்ளது. இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட மூவரை கைதுசெய்துள்ளதாக பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார். கொலை நடந்த உடனேயே சிறப்பு விசாரணைக் குழு இதற்கென தனியாக அமைத்திருந்தார் அமரீந்தர் சிங். இந்தக் குழு தான் இப்போது குற்றவாளிகளை கைது செய்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள, பஞ்சாப் டிஜிபி குப்தா, ``பதான்கோட் ரயில் நிலையம் அருகே சந்தேகத்துக்கு உரிய வகையில் மூவர் இருப்பது தொடர்பாக சிறப்பு குழுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரின் சம்பந்தப்பட்ட லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதில் தங்கியிருந்த மூவரிடமும், கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன், ஒரு தங்கச் சங்கிலி, ரூ .1530 ரொக்கம், மற்றும் இரண்டு மரக் குச்சிகள் (தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது) கைப்பற்றப்பட்டது. இதன்பின் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்துசென்று விசாரணை நடத்தப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் இவர்கள் குற்றத்தை செய்தது உறுதியாகியுள்ளது. இந்த மூவர் மட்டுமல்ல, இன்னும் 11 பேர் இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த மூவரும் ராஜஸ்தானின் சிராவா மற்றும் பிலானி ஜுகிஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த மூவரும், மற்ற 11 பேருடன் இணைந்து கும்பலாக செயல்பட்டு உள்ளனர்.

இந்தக் கும்பல் இதற்கு முன் உத்தரபிரதேசம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாப்பின் பல்வேறு பகுதிகளில் இதே போன்ற கொடூர குற்றங்களைச் செய்துள்ளனர். இதற்கிடையே, ரெய்னா மாமா கொலையான இரவு, 7-8 மணியளவில், இந்தக் கும்பல் 2, 3 குழுக்களாக பிரிந்து ரெய்னாவின் மாமா வீட்டிற்குள் நுழைய மூன்று, நான்கு வழிகளை தேர்வு செய்து வைத்திருந்துள்ளனர். இதில் சில வழிகளில் நுழைய முடியாமல் போக, பின்னர், ஏணியைப் பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது மூன்று பேர் பாய்களில் படுத்திருப்பதை கண்ட இந்தக் கும்பல் வீட்டின் உள் செல்வதற்காக அந்த மூவரையும் தலையில் அடித்து தாக்கி பின் அங்கிருந்தவற்றை கொள்ளையடித்து தப்பியுள்ளனர். பின்னர் அவர்கள் அனைவரும் இரண்டு மற்றும் மூன்று பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து தப்பி ரயில் நிலையத்தை அடைந்து அங்கு தங்களுக்குரிய பங்குகளை பிரித்து கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளனர்" என்று விரிவாக கூறியுள்ளார்.


More Sports News

அதிகம் படித்தவை