2010 லும் சென்னைக்கு முதல் 7 போட்டிகளில் 5 தோல்வி, கடைசியில் கோப்பை இந்த சீசனிலும் சரித்திரம் திரும்புமா?

Will chennai super kings repeat history?

by Nishanth, Oct 11, 2020, 13:55 PM IST

2010ல் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு முதல் 7 போட்டிகளில் 2 வெற்றியும், 5 தோல்விகளும் கிடைத்தன. ஆனால் அந்த சீசனில் வெற்றிக் கோப்பையுடன் தான் சென்னை திரும்பியது. அதேபோலத் தான் சென்னையின் தற்போதைய நிலையும் உள்ளது. எனவே இந்த சீசனிலும் சென்னை அதை சாதனையை படைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐபிஎல் அணிகளில் சென்னை அணிக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இந்த அணி விளையாடும் போது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும். இதற்கு காரணம் 'தல' தோனியின் தலைமையில் அணியில் இடம் பெற்றிருக்கும் நட்சத்திர வீரர்கள் தான். 8 முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடிய ஒரே அணி சென்னை மட்டுமே. இதில் 3 முறை இந்த அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த சீசனிலும் வெற்றிக் கோப்பை சென்னைக்கு தான் என்று கூறுபவர்களும் உள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் முதல் போட்டியிலேயே தற்போதைய சாம்பியனான மும்பை அணியை தோற்கடித்தது.ஆனால் அதற்கு பின்னர் தான் சென்னைக்கு கஷ்ட காலம் தொடங்கியது. தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றியை இழந்து ஹாட்ரிக் தோல்வி கிடைத்தது. இதன் பின்னர் சென்னை விஸ்வரூபம் எடுத்து பஞ்சாபை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இனி நம் அணிக்கு தொடர் வெற்றி தான் என சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது தான் மீண்டும் அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியடைந்தது. இப்படி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் சென்னைக்கு 2 வெற்றியும், 5 தோல்விகளும் கிடைத்துள்ளன.

இனி சென்னை அவ்வளவுதான் என பலரும் கூறி வருகின்ற போதிலும், அதை ஏற்றுக்கொள்ள சென்னை ரசிகர்கள் தயாராக இல்லை. இதற்கு காரணம் உண்டு. ஐபிஎல் 3வது சீசனிலும் முதலில் சென்னை இதே பரிதாபகரமான நிலையில் தான் இருந்தது. 2010ல் நடந்த அந்த சீசனில் முதல் 7 போட்டிகளில் 5 தோல்விகளும், 2 வெற்றிகளும் மட்டுமே கிடைத்தன. அப்போது முதல் முதல் போட்டியிலேயே தோல்வியடைந்த சென்னை, அதன் பின்னர் 2ல் வெற்றி பெற்றது. அதற்குப் பின்னர் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியடைந்து மிக பரிதாபகரமான நிலையில் இருந்தது. ஆனால் கடைசியில் நடந்தது தான் அனைவருக்கும் தெரியுமே. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சென்னை கோப்பையை கைப்பற்றியது.

அதேபோலத் தான் இந்த சீசனிலும் முதல் 7 போட்டிகளில் 5 தோல்விகள், 2 வெற்றிகள் பெற்று மோசமான நிலையில் சென்னை உள்ளது. எனவே சரித்திரம் மீண்டும் திரும்பும் என்றும், 2010ல் நடந்தது போலவே தோனி மேஜிக்கை நிகழ்த்தி இந்த முறையும் கோப்பையை கைப்பற்றுவார் என சென்னை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Ipl league News

அதிகம் படித்தவை