ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (12-10-2020) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஷார்ஜாவில் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.பெங்களூர் அணி ஷார்ஜாவில் ஆடும் முதல் போட்டி இதுவாகும். பெங்களூர் அணியின் தொடக்க இணையான ஆரோன் பின்ச் மற்றும் தேவ்தத் படிக்கல் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஐபிஎல் 2020 சீசனில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் படிக்கல், 23 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சர் என 32 ரன்களை விளாசி எட்டாவது ஓவரை வீசிய ரஸுல் ஓவரில் போல்டாகி வெளியேறினார்.
இந்த சீசனில், நேற்றாவது தனது முதல் அரை சதத்தை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பின்ச் 37 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சர் என 47 ரன்களை அடித்து பிரசித் கிருஷ்ணா ஓவரில் போல்டாகி வெளியேறினார்.13 ஓவருக்கு 94 ரன்களை எடுத்திருந்த பெங்களூர் அணியின் அடுத்துக் கோலி மற்றும் Mr.360 என அழைக்கப்படும் டிவில்லியர்ஸ்ம் இணைந்தனர். அதுவரை ஆமை வேகத்தில் நகர்ந்து பெங்களூரின் ரன்ரேட் திடீரென ஜெட் வேகத்தில் பறந்தது.கடைசி ஐந்து ஓவரில் மட்டும் பெங்களூர் அணி 83 ரன்களை விளாசித் தள்ளியது. கொல்கத்தா அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் தெறிக்கவிட்ட டிவில்லியர்ஸ் 33 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர் என 73 ரன்களை விளாசி கொல்கத்தா அணியை அலறவிட்டார்.
இருபது ஓவர் முடிவில் கோலியின் 33 ரன்களோடு பெங்களூர் அணி 194/2 ரன்களை விளாசியது.இருபது ஓவரில் 195 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி. கடந்த போட்டியில் சொதப்பிய திரிபாதி மிடில் ஆர்டரில் இறங்கினார். பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிய நரைன் நேற்றைய போட்டியில் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக டாம் பேன்டன் அணியில் சேர்க்கப்பட்டார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாம் பேன்டன், கில் உடன் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினார். ஆனால் பேன்டனை தனது வேகத்தில் 8 ரன்களோடு வெளியேற்றினார் பெங்களூர் அணியின் புயல் நவ்தீப் சைனி.
ஷீப்மான் கில் ஒருபுறம் நிதானமாக ஆடினால் அவருடன் இணைந்து நிலைத்த ஆட தவறிவிட்டனர் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள். போராடிய கில் 25 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 34 ரன்களை விளாசி ரன் அவுட் ஆகி வெளியேறினார்.கொல்கத்தா அணியில் பிறகு களமிறங்கிய எவரும் பெரிதாக சோபிக்கவில்லை. கில்(34) மற்றும் ரஸீல் (16), திரிபாதி (16) இவர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்னை அடித்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி பெங்களூர் அணிக்கு எளிதான வெற்றியை வழங்கினர்.
கொல்கத்தா அணியால் இருபது ஓவர் முடிவில் 112 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அணியின் ரன்னை அதிரடியாக உயர்த்திய டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இதனால் பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைச் சுவைத்தது. இந்த வெற்றியின் மூலம் விளையாடிய 7 போட்டியில் 5 வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது பெங்களூர்.