ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காகத் தென்ஆப்பிரிக்கா நாட்டிற்குச் சுற்று பயணம் மேற்கொண்டு, தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, டீன் எல்கர்(141 ரன்கள்) மற்றும் டி வில்லியர்ஸ் (64 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 311 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் தனது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, தென்ஆப்பிரிக்கா வீரர்களின் ஸ்விங் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்க ஜோடியான பான்கிராப்ட் (77 ரன்கள்) மற்றும் வார்னர் (30 ரன்கள்) ஆகியோர் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர்.
மற்ற மிடில் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். பந்துவீச்சாளர் நாதன் லியோன் (47 ரன்கள்) இறுதிக் கட்ட அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 69.5 ஓவர்களில் 255 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் அதிகபட்சமாக மோர்கெல், ரபாடா தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மோர்னே மோர்கல் 300:
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் அபாரமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் மோர்னே மோர்கலின் ஒட்டுமொத்த டெஸ்ட் விக்கெட்டுகளின் எண்ணிக்கை 301 ஆக உயர்ந்தது.
33 வயதான மோர்னே மோர்கல் இதுவரை 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 301 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டொனால்டு, பொல்லாக், நிதினி, ஸ்டெயின் ஆகியோருக்குப் பிறகு 300-விக்கெட்டுக்கு மேல் விக்கெட் வீழ்த்திய 5-வது தென் ஆப்பிரிக்க பவுலர் என்ற சிறப்பை பெருமையை மோர்கல் பெற்றார்.
மோர்னே மோர்கல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெறுவதற்கு முன்பாக சிறப்பான சாதனை புரிந்துள்ளது வீரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கூறியுள்ள மோர்கல், ஆடுகளங்களில் ஸ்டெய்ன் உடன் விளையாடியதை எப்போதும் தன்னால் மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், “இது எனக்கு சிறப்பான ஒன்று. ஸ்டெய்ன் உடன் நீண்டகாலம் பயணித்து வந்திருக்கிறேன். இருவருமே ஆரம்பகட்டத்தில் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினோம். இருவரும் ஒருவொருக்கு ஒருவர் உறுதுணையாக ஆடி வந்துள்ளோம்” என்றார்.