விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசியதோடு 20 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
மேற்குவங்க மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் உள்ளூர் கிளப் போட்டியான, ஜேசி முஹர்ஜி டிராபி போட்டி மேற்குவங்கத்தின் காலிகாட் மைதானத்தில் நடைபெற்றது. இதில், பெங்கால் நாக்பூர் ரயில்வே அணிக்கு எதிராக மோஹுன் பாகன் அணி மோதியது.
இதில், முதலில் பேட்டிங் செய்த ரயில்வே அணி 152 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய மோஹுன் பாகன் அணியில் தொடக்க வீரர் சப்ஹோமாய் தாஸ் 22 பந்துகளில் 43 ரன்கள் எடுக்க, மறுபுறத்தில் விருத்திமான சஹா வெளுத்து வாங்கினார்.
20 பந்துகளை சந்தித்த விருத்திமான சஹா 14 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 102 ரன்கள் எடுத்தார். இதில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. இதில் அவரது ஸ்டிரைக் ரேட் 510.00 என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அந்த அணி 10 விக்கெட்டுகளில் அபார வெற்றிபெற்றது.
இது குறித்து கூறியுள்ள சஹா, “முதல் பந்தில் பந்தை பேட்டின் நடுப்பகுதியில் அடித்து விளையாடும்போதே நன்றாக உணர்ந்தேன். அப்படியே செய்தேன். முதல் ஐந்து பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடித்த பிறகு, கடைசி பந்தையும் அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். இது சாதனையா என்று தெரியவில்லை, ஐபிஎல் கிரிக்கெட்டை எதிர்நோக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.