ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு அடிமேல் அடி கிடைத்து வருகிறது. ஏற்கனவே தோல்விகள் தொடர்கதையாகி வரும் நிலையில் இந்த அணியின் முக்கிய பந்து வீச்சாளரான பிராவோ காயம் காரணமாக ஊர் திரும்பத் தீர்மானித்துள்ளார்.சிலருக்கு 13 அதிர்ஷ்டம் இல்லாத எண் என்று கூறுவார்கள். சென்னை அணிக்கும் 13 அதிர்ஷ்டம் இல்லாத எண்ணாக மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இந்த ஐபிஎல் 13வது சீசனில் சென்னை அணி இதுவரை கண்டிராத வகையில் மிக மோசமாக விளையாடி வருகிறது. புள்ளிகள் பட்டியலில் எப்போதுமே முதல் நான்கு இடத்தில் இருந்து வரும் சென்னை அணி, தற்போது கடைசி இடத்திற்குச் சென்று பரிதாபகரமான நிலையில் உள்ளது.
இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அணி 3போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் 6 புள்ளிகளுடன் இந்த அணி தற்போது 8வது இடத்தில் உள்ளது.
இதுவரை எந்த ஐபிஎல் சீசனிலும் சென்னை அணி இவ்வளவு மோசமான நிலையை அடைந்தது கிடையாது. இந்த சீசனில் தொடக்கம் முதலே சென்னை அணிக்கு நேரம் சரியில்லை என்றே கூற வேண்டும். அடிமேல் அடி கிடைத்து வருகிறது. இந்த அணியின் நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் திடீரென அணியிலிருந்து விலகினர். தொடர்ந்து இந்த அணியின் பல வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னை அணியின் முதுகெலும்பாகக் கருதப்படும் கேப்டன் தோனி பேட்டிங்கில் சொதப்பியதும் அணிக்குப் பலவீனத்தை ஏற்படுத்தியது.
இனிவரும் அனைத்து போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அது மட்டும் இல்லாமல் வேறு சில அணிகளின் வெற்றி, தோல்வியை பொருத்தே சென்னை அணி முதல் 4 இடத்திற்குள் வர முடியுமா என்பதைக் கூற முடியும். இந்நிலையில் சென்னைக்கு அடுத்த அடியாக நட்சத்திர பந்துவீச்சாளர் பிராவோ காயம் காரணமாக ஊர் திரும்பத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலைச் சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை ஷார்ஜாவில் டெல்லி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் பிராவோவுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது.
அதனால் தான் அவரால் கடைசி ஓவரை வீச முடியாமல் போனது. கடைசி ஓவரை வீசிய ரவீந்திர ஜடேஜாவின் ஓவரில் அக்சர் பட்டேல் 3 சிக்சர்களை அடித்து டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.