ஐபிஎல் நடப்பு தொடரில் இன்றைய முக்கியமான ஆட்டத்தில் கொல்கத்தா டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் சுப்மன் கில், ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சீக்கிரமே அவுட் ஆக, சுனில் நரேனுடன் சேர்ந்துகொண்டு அணியை சரிவில் இருந்து மீட்டவர் நிதிஷ் ராணா. 53 பந்துகளுக்கு 81 ரன்கள் விளாசினார். இவர்களின் உதவியுடன், 195 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின் டெல்லி அணி களமிறங்கியது. முதலில் இரண்டு விக்கெட்டுகள் விரைவாக இழந்தாலும், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் இணைந்து அதிரடியாக விளையாடினார்.
இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஒருகட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்று விடும் என்ற நினைப்பு வந்துவிட்டது. இந்த சூழலில் தான் பந்துவீச களம்புகுந்தார் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி. இவர் வந்த முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரிஷப் பண்ட்டை நடையை கட்ட வைத்தார். அதன்பின் அடுத்த ஓவரில் ஹெட்மயர், ஷ்ரேயாஸ் அய்யர் என இருவரையும் தொடர்ந்து இரண்டு பந்துகளில் வெளியேற்றி டெல்லி அணிக்கு ஷாக் கொடுத்தார்.
3 விக்கெட்டோடு நின்று விடவில்லை வருண். 3வது ஓவரிலும் தமிழனின் கெத்தை காட்டினார். 3வது ஓவரின் முதல் பந்தில் ஸ்டோனிஸ், கடைசி பந்தில் அக்சர் படேல் என மொத்தம் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லியின் வெற்றி கனவை தவிடுபொடியாக்கினார். சிறப்பான தனது பௌலிங் மூலம் சில சாதனைகளையும் செய்திருக்கிறார் வருண். கொல்கத்தா அணிக்காக ஒரு போட்டியில் 5 விக்கெட் எடுத்த வீரர் சுனில் நரேன் மட்டுமே. இன்று அதனை உடைத்தார் வருண் சக்கரவர்த்தி. இதற்கிடையே, இன்றைய போட்டியில், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்துள்ளது.