ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்றைய போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லை. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணிக்குத் தொடக்கமே ஆர்ச்சரின் ரூபத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. காயம் காரணமாகக் கடந்த இரு போட்டியில் விளையாடாத மயங்க் அகர்வால் நேற்றைய போட்டியிலும் ஆடவில்லை. எனவே அவருக்குப் பதிலாக மாற்று வீரராக மந்தீப் சிங் களமிறங்கினார். கடந்த இரு போட்டியிலும் சிறப்பாக ஜொலித்த மந்தீப் சிங் நேற்றைய போட்டியில் ஆர்ச்சர் வீசிய பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுலுடன், "யுனிவர்சல் பாஸ்" கெய்ல் கைகோர்க்க ஆட்டத்தின் போக்கு மாறியது. தொடக்கத்தில் கெய்ல் கொடுத்த இரு கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்ட ராஜஸ்தான் அணிக்குத் தக்க பதிலடியைக் கொடுத்தார்.ரியான் பராக் மற்றும் திவேதியா இருவரும் கேட்ச் வாய்ப்பை தவறவிட கெய்ல் தனது அதிரடி பாணியைத் தொடங்கினார்.கெய்ல் மற்றும் ராகுல் இருவரும் இணைந்து 120 ரன்களை விளாசினர். நிதானமாக விளையாடிய ராகுல் 41 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சர் என 46 ரன்களை விளாசி பென் ஸ்டோக்ஸ் ஓவரில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
மறுபுறம் பவுலர்களை அலறவிட்டுக் கொண்டிருந்த கெய்ல் 63 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சர்களை தெறிக்கவிட்டு 99 ரன்களை விளாசி அசத்தினார்.இருபது ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது. இருபது ஓவர் முடிவில் 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் அணி.
ஓவருக்கு 9.3 ரன்ரேட் விகிதம் தேவைப்பட்ட நிலையில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் வழக்கத்துக்கு மாறாக அதிரடியைத் தொடங்கினார். மறுபுறம் ஆடிய உத்தப்பா நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பவர் பிளே முடிவதற்குள் பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளை விளையாடி 6 பவுண்டரி, 3 சிக்சரகளை தெறிக்கவிட்டு தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.
உத்தப்பா உடன் ராஜஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கைகோர்க்க, இருவரும் அணியின் ஸ்கோரை மெதுவாக உயர்த்தினர். வழக்கம் போலத் தனது அதிரடி பாணியைத் தொடர்ந்த சாம்சன் 25 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 48 ரன்களை சேர்த்து ரன் அவுட்டாகி வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் மற்றும் பட்லர் இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ராஜஸ்தான் அணி 186 ரன்களை 17.3 ஓவரில் இலக்கை எட்டி தனது ஆறாவது வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.