ஆஸ்திரேலியாவுடன் நாளை முதல் டெஸ்ட் இந்திய வீரர்கள் அறிவிப்பு ரிஷப் பந்த், சுப்மான் கில்லுக்கு இடமில்லை

by Nishanth, Dec 16, 2020, 18:14 PM IST

ஆஸ்திரேலியாவுடன் நடைபெற உள்ள முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மற்றும் சுப்மான் கில் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடர் முடிவடைந்து விட்டது. ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவும், டி20 போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்தியாவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை தொடங்குகிறது. இதில் விளையாட உள்ள 11 வீரர்கள் அடங்கிய இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஆஸ்திரேலியா 'ஏ' அணியுடன் நடந்த 3 நாள் பயிற்சிப் போட்டியில் சிறப்பாக ஆடி சதம் அடித்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மற்றும் சுப்மான் கில் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக பிரித்வி ஷாவும், மாயங் அகர்வாலும் விளையாடுவார்கள்.

இவர்கள் தவிர கேப்டன் விராட் கோஹ்லி, துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே, சேதேஷ்வர் பூஜாரா, ஹனுமா விஹாரி, விருத்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் உள்ளனர். அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்களும், ஒரு சுழற்பந்து வீச்சாளரும் உள்ளனர். 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஏகப்பட்ட பவுன்சர்களை வீசி ஆஸ்திரேலிய 'ஏ' அணி வீரர்களைத் திகைக்க வைத்தனர். இதேபோல நாளை தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சர்கள் வீசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலிய அணியில் பல முன்னணி வீரர்கள் காயமடைந்துள்ளது அந்த அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் காயம் காரணமாக டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தவிர வில் புகோவ்ஸ்கி, ஷான் ஆபட், கேமரூன் கிரீன், ஹாரி கான்வே மற்றும் ஜாக்சன் பேட் ஆகியோரும் காயமடைந்துள்ளனர். நேற்று பயிற்சியின் போது போது ஸ்டீவ் ஸ்மித் இடது கையில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனே திரும்பிச் சென்று விட்டார். பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப் போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. இந்திய நேரப்படி 9:30 மணிக்குப் போட்டி தொடங்கும்.

You'r reading ஆஸ்திரேலியாவுடன் நாளை முதல் டெஸ்ட் இந்திய வீரர்கள் அறிவிப்பு ரிஷப் பந்த், சுப்மான் கில்லுக்கு இடமில்லை Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை