கேப்டனாக பொறுப்பேற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று ரஹானே ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இந்திய கேப்டன் தோனியும் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். அந்த சாதனையை தற்போது ரஹானே சமன் செய்துள்ளார்.ஆஸ்திரேலிய அணியுடன் அடிலெய்டு ஓவலில் கிடைத்த படுதோல்வியை மறக்கடிக்கும் வகையில் அதேபோல 8 விக்கெட் வித்தியாசத்தில் மெல்பர்னில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா பழி வாங்கியுள்ளது.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் வரை இந்தியா வெற்றி பெறும் என்று யாராலும் கணித்திருக்க முடியாது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா ஆகியோர் அணியில் இல்லை. இதேபோல வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். இந்த போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவும் காயம் காரணமாக வெளியேறினார். இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்திருந்தால் அதைச் சமாளிக்க இது போல பல காரணங்களைக் கூறி இருக்க முடியும்.
ஆனால் அவ்வளவு எளிதில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்கத் தயாராக இல்லை என்பது தற்போது அனைவருக்கும் புரிந்து விட்டது.இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தற்காலிக கேப்டன் ரஹானே, தான் பொறுப்பேற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். கடந்த 2008ல் அனில் கும்ப்ளேவுக்கு பதிலாகத் தான் தோனி டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். பின்னர் நடந்த 4 போட்டிகளிலும் அவர் தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது. கேப்டனாக பொறுப்பேற்ற முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணியின் ஒரே கேப்டன் தோனி மட்டும் தான். தற்போது ரஹானே தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்றால் தோனியின் அடுத்த சாதனையை ரஹானே சமன் செய்வார்.
கோஹ்லியால் கூட இந்த சாதனையைப் படைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மெல்பர்ன் மைதானத்தில் இதுவரை இந்தியா 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்த மைதானத்தில் இது இந்தியாவின் 4வது வெற்றியாகும். வெளிநாட்டு மண்ணில் இந்தியா அதிக போட்டிகளில் வெற்றி பெறும் மைதானம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல், கிங்ஸ்டனிலுள்ள சபீனா பார்க், கொழும்பிலுள்ள எஸ்எஸ்சி ஆகிய மைதானங்களில் இதுவரை இந்தியா தலா மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது. 2010 க்கு பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாசில் தோல்வியடைந்து முதலில் பவுலிங் செய்து இந்தியா வெற்றி பெறும் முதல் டெஸ்ட் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.