ஆஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது இந்திய வீரர்கள் காயமடைவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்று 2 முக்கிய வீரர்கள் காயமடைந்து போட்டியில் இருந்து வெளியேறி உள்ளனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆஸ்திரேலிய பவுலர்களின் பந்துவீச்சால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஆஸ்திரேலிய தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா புவனேஸ்வர் குமார் மற்றும் இளம் வீரர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் யாரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சேர்க்கப்படவில்லை.
இதற்கிடையே காயத்திலிருந்து குணமாகி ரோகித் சர்மா மீண்டும் அணியில் சேர்ந்துள்ளார். தற்போது இவர் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் தொடங்கிய பின்னரும் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயமடைந்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து இவர்களுக்குப் பதிலாக முகம்மது சிராஜ் மற்றும் நவ்தீப் செய்னி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் 2 முக்கிய வீரர்கள் காயமடைந்தது இந்திய அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரிஷப் பந்த் கம்மின்ஸ் பந்தை எதிர் கொள்ளும் போது அவரது இடது கையில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் காயத்தைப் பொருட்படுத்தாமல் அவர் விளையாடினார். ஆட்டமிழந்த பின்னர் அவருக்கு உடனடியாக ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இன்றைய போட்டியில் விருத்திமான் சாஹா களமிறங்கினார்.இதற்கு அடுத்து இந்திய அணியின் முக்கிய வீரரான ரவீந்திர ஜடேஜாவும் காயமடைந்தார். மிச்செல் ஸ்டார்க்கின் பந்து இவரது கைவிரலில் பட்டது. இவரும் வலியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடினார்.
38 பந்துகளில் 28 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். போட்டி முடிந்த பின்னர் ஜடேஜாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டது. இவர் இந்த போட்டியில் தொடர்ந்து விளையாடுவாரா என்பது சந்தேகமே. முக்கிய வீரர்கள் 2 பேர் காயம் காரணமாக வெளியேறி இருப்பது இந்திய அணிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, ஸ்டீவன் ஸ்மித்தை ரன் அவுட்டும் செய்த ஜடேஜா தொடர்ந்து விளையாடாவிட்டால் அது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக அமையும்.