ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 7 வருடங்களுக்குப் பின் நேற்று முதன் முதலாக முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் களமிறங்கினார். அவர் 1 விக்கெட்டை கைப்பற்றிய இந்தப் போட்டியில் புதுச்சேரியை கேரளா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கடந்த 2013ல் அவர் சூதாட்டப் புகாரில் சிக்கினார்.
இதையடுத்து ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் 7 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. இதையடுத்து ஸ்ரீசாந்தால் இந்த தடைக் காலத்தில் எந்த கிரிக்கெட் போட்டியிலும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இவரது தடைக்காலம் கடந்த மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து அவர் மீண்டும் தீவிர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். விரைவில் இந்திய அணியில் இடம் பெறுவதே தனது லட்சியம் என்றும், அடுத்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக விளையாட முயற்சிப்பேன் என்றும் ஸ்ரீசாந்த் கூறினார்.
இந்நிலையில் முஷ்டாக் அலி டிராபிக்கான டி 20 போட்டியில் கேரள அணிக்காக விளையாட அவர் தேர்வு செய்யப்பட்டார்.நேற்று மும்பையில் கேரளா மற்றும் புதுச்சேரி அணிகளுக்கிடையே முஷ்டாக் அலி டிராபிக்கான டி20 போட்டி நடந்தது. இதில் டாசில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்த புதுச்சேரி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. போட்டியின் கடைசி பந்தில் அடித்த சிக்சர் உள்பட 29 பந்தில் 33 ரன்கள் எடுத்த அஷித் ராஜீவ், புதுச்சேரி அணிக்காக அதிகபட்ச ரன் எடுத்தார். இந்தப் போட்டியில் தடைக்காலம் முடிந்து 7 ஆண்டுகளுக்குப் பின் களமிறங்கிய ஸ்ரீசாந்த் 1 விக்கெட்டை கைப்பற்றினார். கேரளாவுக்காக சிறப்பாகப் பந்து வீசிய ஜலஜ் சக்சேனா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் பின்னர் களமிறங்கிய கேரளா 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. கேரளா அணிக்காக கேப்டன் சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 32 ரன்கள் எடுத்தார்.