ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தருக்கு 3 விக்கெட்டுகள்

by Nishanth, Jan 16, 2021, 09:42 AM IST

பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்று 369 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அரங்கேற்ற ஆட்டக்காரர்களான தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்தனர். ஷார்துல் தாக்கூரும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. பெரும்பான்மையான இந்திய வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில் நேற்று பல மாற்றங்களுடனும், புதிய வீரர்களுடனும் இந்தியா களமிறங்கியது.

பும்ரா, ரவீந்திர ஜடேஜா, அஷ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோருக்கு பதிலாகத் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் மாயங்க் அகர்வால், ஷார்துல் தாக்கூர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டேவிட் வார்னர் 1 ரன்னிலும், மார்க்கஸ் ஹாரிஸ் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதன் பின்னர் களமிறங்கிய லபுஷேன் சதமடித்து 108 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை தமிழக வீரர் நடராஜன் கைப்பற்றினார். அரங்கேற்றப் போட்டியில் நடராஜனுக்கு இது முதல் விக்கெட்டாக அமைந்தது. தொடர்ந்து ஸ்மித் 36 ரன்களிலும், மேத்யூ வேட் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்திருந்தது. முதல் நாளிலேயே அரங்கேற்ற வீரர்களான நடராஜன் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.இன்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. இன்றும் இந்திய பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினர். நேற்று ஆட்டமிழக்காமல் இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் அரைசதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கிரீன் 47 ரன்களிலும், கம்மின்ஸ் 2 ரன்களிலும், லியோன் 24 ரன்களிலும், ஹேசில்வுட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஸ்டார்க் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா 369 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அரங்கேற்ற வீரர்களான தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஷார்துல் தாக்கூரும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் பின்னர் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் சுப்மான் கில்லும் விளையாடினர். ஆனால் இந்தியாவுக்கும் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சுப்மான் கில், கம்மின்ஸ் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 11 ரன்களிலேயே இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. இதன் பின்னர் ரோகித் சர்மாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். 12 ஓவர்கள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.

You'r reading ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தருக்கு 3 விக்கெட்டுகள் Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை