பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா உணவு இடைவேளையின்போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து இந்தியாவை விட ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் விளையாட தொடங்கிய இந்தியா வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷார்துல் தாக்கூர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 336 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 33 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா தன்னுடைய 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்கத்திலேயே டேவிட் வார்னர் அதிரடியாக ஆடினார். அவர் முகம்மது சிராஜின் ஓவரில் தொடர்ந்து 3 பவுண்டரிகள் அடித்தார். நேற்று ஆட்டம் முடியும் போது ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 20 ரன்களுடனும், ஹாரிஸ் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில் இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது.
இதில் சிறப்பாக ஆடி அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த டேவிட் வார்னர் 48 ரன்களில் வாஷிங்டன் சுந்தரின் பந்தில் ஆட்டமிழந்தார். ஹாரிஸ் 38 ரன்களில் ஷார்துல் தாக்கூரின் பந்தில் ஆட்டமிழந்தார்.இதன் பின்னர் கடந்த இன்னிங்சில் சதம் அடித்த லபுஷேன் 25 ரன்களில் சிராஜின் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து மேத்யூ வேட் அதே சிராஜின் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 31 ரன்களுடனும், கிரீன் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா இந்தியாவை விட 182 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய தரப்பில் சிராஜ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.