சிஎஸ்கே அணியின் அதிரடி ஆட்டகாரர் வாட்சன் இடத்தை யார் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பு சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தொன்றியுள்ளது. வரும் 2021 ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெறவுள்ள ஐபிஎஸ் தொடரில் தங்கள் அணியில் உள்ள வீரர்களை தக்கவைக்கவும், விடுவிக்கவும் நேற்று முன்தினம் ஜனவரி 20-ம் தேதி வரை பிசிசிஐ அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், அடுத்த மாதம் 11-ம் தேதி நடைபெற இருக்கும் ஐபிஎல் மினி ஏலம்தான் என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். இதனையடுத்து, ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் தங்கள் வீரர்களை விடுவித்தது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக கருதப்படும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதிரடி ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் கடந்த சீசன் முடிந்தவுடன் தன்னுடைய ஓய்வை அறிவித்துவிட்டார். இதனால், பியூஷ் சாவ்லா, கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங், முரளி விஜய், மோனு சிங் ஆகிய 6 வீரர்களை சிஎஸ்கே விடுவித்துள்ளது. சின்ன தல சுரேஷ் ரெய்னா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி, ஜடேஜா, ரெய்னா, ஃபாப் டு பிளெசிஸ், சாம் கரன், டிவைன் பிராவோ, ஹேசல்வுட், லுங்கி இங்கிடி, ராயுடு, கரண் சர்மா, மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்கூர், ருதுராஜ் கெய்க்வாட், என்.ஜெகதீசன், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், கே.எம்.ஆசிப், ஆர்.சாய் கிஷோர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இருப்பினும், ஏலத்தின்போது, அணிக்கு ஆள்சேர்க்க சிஎஸ்கே நிர்வாகத்தினரிடம் ரூபாய் 22.9 கோடி உள்ளது. இதன் மூலம் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்கு இணையான வீரர்களை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் முயற்சி செய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது.