சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா- இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியை காண பொதுமக்களுக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேலும், அதற்கு பின்னர், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் விளையாடவுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையும், 2-வது போட்டி சொன்னையில் பிப்ரவரி 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்கிறது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலும் நடைபெறுகிறது.
இதற்கிடையே, கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் டி20 போட்டி நடைபெற்றது போல, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா- இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளை கண்டு மகிழ 50 சதவித ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. மேலும், ரசிகர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.