இங்கிலாந்து அணியுடனான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிப். 5ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களுக்கும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் முடிவு வந்துள்ளது. இதையடுத்து இன்று முதல் இரு அணி வீரர்களும் பயிற்சியைத் தொடங்கினர்.இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த அணி நான்கு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும், அடுத்த 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடைபெறுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் வரும் 5ம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து வீரர்கள் இலங்கையில் இருந்து நேராக சென்னைக்கு வந்தனர். இந்நிலையில் இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் அனைவருக்கும் மூன்று கட்டங்களாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த மூன்று பரிசோதனையிலும் அனைவருக்கும் நெகட்டிவ் முடிவு வந்துள்ளது. இதையடுத்து அனைத்து வீரர்களும் தற்போது உயிர் பாதுகாப்பு குமிழில் உள்ளனர். லண்டனில் இருந்து நேரடியாக சென்னை வந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜெப்ரி ஆர்ச்சர் இருவரும் தனிமை காலத்தை ஏற்கனவே முடித்து விட்டனர்.
இந்நிலையில் இரு அணி வீரர்களும் இன்று முதல் பயிற்சியை தொடங்கியுள்ளனர். இலங்கை அணியை டெஸ்ட் போட்டியில் 2-0 என்ற கணக்கில் தோற்கடித்த மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். இதேபோல ஆஸ்திரேலிய மண்ணில் அவர்களிடம் சரித்திர வெற்றி பெற்ற தெம்பில் இந்திய வீரர்களும் உள்ளனர். இதனால் இந்த இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 5ம் தேதி தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியை பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் 13ம் தேதி தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 50 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல அகமதாபாத்தில் நடைபெறும் 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டியிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.