இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அபாரமாக ஆடி இன்று இரட்டை சதம் அடித்தார். தேனீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 454 ரன்கள் குவித்துள்ளது.சென்னை டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான பர்ன்ஸ் 33 ரன்களிலும், சிப்லி 87 ரன்களிலும், பின்னர் வந்த லாரன்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். நேற்று ஆட்ட நேர முடிவில் சதம் அடித்த கேப்டன் ஜோ ரூட் 128 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில் இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. கேப்டன் ஜோ ரூட்டும், பென் ஸ்டோக்சும் அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் ஷஹ்பாஸ் நதீமின் பந்தில் 82 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தனர். இதன்பிறகு ஜோ ரூட்டுடன் ஒல்லி போப் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் சிறப்பாக ஆடிய கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்தார். தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 454 ரன்கள் குவித்துள்ளது. ஜோ ரூட் 209 ரன்களுடனும், ஒல்லி போப் 24 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.