சென்னை டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதத்தைக் கடந்தார். இவர் 47 பந்துகளில் 1 சிக்ஸ் மற்றும் 8 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார்.சென்னை டெஸ்ட் போட்டியில் முதல் நாளான இன்று தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டாசில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். கோஹ்லிக்கு டாஸ் கிடைத்தது இந்திய ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர்.
ஆனால் 2வது ஓவரிலேயே கில் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டோனின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணியின் கணக்கிலும் ரன் எதுவும் சேரவில்லை. ரன் எடுப்பதற்கு முன்பே இந்திய அணிக்கு முதல் விக்கெட் பறிபோனது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் ரோகித் சர்மாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். அவர் வழக்கம் போல மெதுவாக ஆட்டத்தைத் தொடங்கினார்.
ஆனால் மறு முனையில் ரோகித் சர்மா தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 1 சிக்ஸ் மற்றும் 8 பவுண்டரிகளின் உதவியுடன் 47 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். தொடர்ந்து இவர் அதிரடியாக ஆடி வருகிறார். 18 ஓவர்கள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 56 ரன்களுடனும், புஜாரா 19 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.